கத்தார், அல் வாப் பகுதியில் உள்ள குடியிருப்பு வளாகத்தில் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் நேற்று (26) மாலை சுட்டுக் கொல்லப்பட்டார். பாதுகாப்பு அதிகாரியை மீறி உள்ளே நுழைய முற்பட்ட கொலையாளியின் அடையாளத்தை கோரியதற்காகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும் துப்பாக்கி சூடு நடத்தியவர் ஒரு இளைஞன் என்றும் அவர் கத்தார் நாட்டு பிரஜை என்றும், அவர் வந்த அதே வாகனத்தில் ஒரு பெண்ணுடன் சேர்ந்து வளாகத்திற்குள் நுழைய முயன்றார் என்றும், ஆனால் அவரது அடையாள அட்டையை முன்வைக்காததால் பாதுகாப்பு அதிகாரியினால் அனுமதி மறுக்கப்பட்டது என்றும் அங்கிருந்த சாட்சிகள் தெரிவித்தனர்.
பின்னர் கடும் கோபமடைந்த குறித்த இளைஞர் பாதுகாப்பு அதிகாரியை சுட்டுவிட்டு அதே வளாகத்துக்குல் அவர் வண்டியை ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும் பாதுகாப்பு அதிகாரியும் அவரது சக ஊழியர் மீதும் பலமுறை சுடப்பட்டதாக அங்கிருந்த சாட்சிகள் கூறுகின்றனர்.
மேலும் படுகாயமடைந்த குறித்த பாதுகாப்பு அதிகாரி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அடுத்து, படுகாயமடைந்த இலங்கையர் என சந்தேகிக்கப்படும் நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தாக்குதலுக்குப் பிறகு துப்பாக்கி ஏந்தியவரை கத்தார் பொலிஸார் உடனடியாகக் கைது செய்தனர் என்றும் அவர் இப்போது அரசு வழக்கறிஞர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளார்.
தகவல்களின்படி, இறந்த பாதுகாப்பு அதிகாரி மூன்று குழந்தைகளின் தந்தை மற்றும் அவரது ஒப்பந்தம் முடிவடைந்ததால் அவர் தனது சொந்த நாட்டிற்கு திரும்பவிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இது தொடர்பில் யாழ் நியூஸ் கத்தாரில் உள்ள இலங்கை தூரகத்தை தொடர்புகொண்டபோது, அவர்களுக்கு எவ்வித உத்தியோகபூர்வ தகவலும் கிடைக்காத பட்சத்தில் இது தொடர்பில் எந்த தகவலையும் வழங்க மறுத்து விட்டது. (யாழ் நியூஸ்)