பொரளை தேவாலயத்தில் இருந்து கைக்குண்டு மீட்கப்பட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட ஓய்வுபெற்ற வைத்தியருக்கு குறித்த குண்டை வழங்கியதாக கூறப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை - ரன்ன பகுதியில் வைத்து குறித்த சந்தேக நபர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெலிக்கடை சிறைச்சாலைக்கு அருகில் பொரளை ஆனந்த ராஜகருணா மாவத்தையில் அமைந்துள்ள சகல பரிசுத்தவான் தேவாலயத்தில் கைவிடப்பட்ட நிலையில் கடந்த 11ஆம் திகதி கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த கைக்குண்டை வைத்ததாக நம்பப்படும் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
அவரிடம் பெறப்பட்ட வாக்குமூலத்துக்கு அமைய பிலியந்தலையில் வைத்து கடந்த 17ஆம் திகதி குறித்த ஓய்வுபெற்ற வைத்தியர் கொழும்பு குற்றவியல் பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், தற்போது வரை குறித்த கைக்குண்டு விவகாரம் தொடர்பில் மொத்தமாக 6 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.