இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்பட்ட டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெய் நாளையுடன் (18) முடியப்பெறும் என இலங்கை மின்சார சபை பொறியியலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருளின் கிடைக்கும் தன்மையை பொறுத்தே நாளையதினம் எவ்வாறு மின்சாரம் வழங்குவது என்பது குறித்து தீர்மானிக்கப்படும் என சங்கத்தின் தலைவர் சௌமிய குமாரவடு தெரிவித்தார்.
நீர்மின் உற்பத்தி 35% ஆக குறைந்துள்ளதாகவும், ஏப்ரல் அல்லது மே வரை குறிப்பிடத்தக்க மழை பெய்யாது என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது என்றார்.
நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதாகவும், இன்னும் இரண்டு மாதங்களில் நிலைமை மேலும் மோசமாகும் என்றும் அவர் கூறினார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
எவ்வாறாயினும், எரிபொருள் விநியோகம் செய்யப்படாத பட்சத்தில் அடுத்த சில நாட்களுக்கு இலங்கை இந்திய எண்ணெய் நிறுவனத்திடம் இருந்து எரிபொருளை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் கலந்துரையாடி வருவதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
நுரைச்சோலை அனல்மின் நிலையம் அடுத்த வாரம் இயங்கத் தொடங்கியதன் பின்னர் மின் நெருக்கடி குறையும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். (யாழ் நியூஸ்)