தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை நாளை மறுதினம் (22) இடம்பெறவுள்ள நிலையில், மாணவர்கள் மனதளவில் பாதிப்படையக்கூடிய வகையில் பெற்றோர்கள் அணுகக்கூடாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மதாஸ வலியுறுத்தியுள்ளார்.
பரீட்சையில் தோற்றவுள்ள மாணவர்களையும், அவர்களின் பெற்றோர்களையும் தெளிவுபடுத்தும் வகையில் கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.
பரீட்சையில் சித்தியடைவதற்கு, 190 இற்கும் அதிக புள்ளிகளைப் பெறவேண்டும் என மாணவர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்க வேண்டாம்.
பரீட்சை தினத்தன்று, மாணவர்களுக்கு அதிக உணவை வழங்குவதை தவிர்க்க வேண்டும்.
பரீட்சை தினத்தன்று காலையில், அதிக உணவை உண்ணக் கொடுப்பதால், மாணவர்கள் பரீட்சை எழுத முடியாமல், நித்திரை ஏற்படக்கூடும் என்பதுடன், வயிற்றுவலி உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு அவர்கள் முகங்கொடுக்க நேரிடும்.
அதேநேரம், தண்ணீர் போத்தல், தொற்று நீக்கித் திரவம், அடிமட்டம், பென்சில் உள்ளிட்ட அவசியமான பொருட்களை பெற்றோர்கள் மாணவர்களுக்கு கொடுத்து அனுப்ப வேண்டும்.
சுகாதார விதிமுறைகள் உரியவாறு கடைப்பிடிக்கப்பட வேண்டும்..
அதைவிடுத்து, கண்காணிப்பாளரிடம் கோரி வேறு மாணவர்களிடமிருந்து இந்தப் பொருட்களை பெற்றுக்கொள்ள வேண்டிய நிலைமையை ஏற்படுத்தக்கூடாது என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எல்.எம்.டீ. தர்மதாஸ தெரிவித்துள்ளார்.