கடந்த வாரம் கட்டாரின், தோஹாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த நபர் இலங்கைத் தொழிலாளி அல்ல என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இன்று (31) உறுதிபடுத்தியுள்ளது.
உயிரிழந்தவர் இலங்கையர் அல்ல என்பதை கட்டார் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளதாக பணியகத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
கடந்த புதன்கிழமை மாலை இலங்கையை சேர்ந்த பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டதாக தோஹா நியூஸ் செய்தி வெளியிட்டிருந்தது.
ஊடகங்களில் வெளியான செய்திகளை அடுத்து, கட்டாரில் உள்ள இலங்கை தூதரகத்தின் தொழிலாளர் பிரிவுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு இராஜாங்க அமைச்சர் பியங்கர ஜயரத்ன பணிப்புரை விடுத்ததாக பணியகத்தின் பேச்சாளர் மங்கள ரந்தெனிய கூறினார்.
அதன்படி கட்டாரில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைவர் கீர்த்தி முத்துக்குமாரன அப்பகுதியிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தகவலைச் சரிபார்த்துள்ளார்.
இதன்போதே உயிரிழந்தவர் இலங்கையர் அல்ல என்பதை கட்டார் பொலிஸார் உறுதிபடுத்தியதாக கூறினார்.
எனினும் இதுதொடர்பில் உண்மை நிலவரம் இன்னும் சந்தேகத்துக்கிடமாகவே உள்ளது. (யாழ் நியூஸ்)
https://www.dohanews.co/man-arrested-over-murder-of-security-guard-in-qatar/