இந்தியாவில் ராஜஸ்தான் மாநிலம் ருக்காசர் கிராமத்தைச் சேர்ந்த தலித் சமுதாய இளைஞர் ராகேஷ் மேக்வால் கடந்த 27ஆம் திகதி உள்ளூர் பொலிசாரிடம் புகார் ஒன்றை அளித்திருந்தார்.
பழைய விரோதம் காரணமாக சிலர் தன்னை வீட்டில் இருந்து இரவு நேரத்தில் கடத்திச் சென்று வயல் பகுதி அருகே மது குடிக்க வற்புறுத்தியதாக தமது புகாரில் அவர் தெரிவித்துள்ளார்.
அதற்கு மறுப்பு தெரிவித்தை அடுத்து, அவர்கள் மதுபாட்டிலில் சிறுநீர் கழித்து அதை தமது தொண்டைக்குள் வலுக்கட்டாயமாக புகுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தமது சாதி குறித்து இழிவாக பேசியதாகவும் அவர் கூறியுள்ளார். மேக்வாலின் முதுகில் இருந்த காயங்கள் அவர் தாக்கப்பட்டதை உறுதி செய்ததாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து குற்றம்சாட்டப்பட்ட 08 பேர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட வாகனம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக உமேஷ் மற்றும் பீர்பால் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அக்ஷய், ராஜேஷ், ராகேஷ், தாராசந்த், பிடாதிசந்த் மற்றும் தினேஷ் ஆகியோர் தலைமறைவாக உள்ளனர்.
எனினும் மேக்வால் சிறுநீர் குடிக்க வற்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு இன்னும் நிரூபிக்கப்படவில்லை என விசாரணை அதிகாரி ஹிமான்ஷு சர்மா தெரிவித்தார்.
முன்னதாக ஹோலி பண்டிகை கொண்டாட்டத்தின்போது மேக்வால் உள்ளூர் இசைக்கருவியை வாசித்துக் கொண்டிருந்ததாகவும் அப்போது குற்றம் சாட்டப்பட்டவர்கள் மோசமான கருத்துக்களை கூறியதால் இரு தரப்பினர் இடையே முதல்முறையாக மோதல் ஏற்பட்டதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.