புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் குறைந்தபட்சம் ரூ.240 வழங்கப்பட வேண்டும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா அரசாங்கத்தை வலியுறுத்தினார்.
இன்று நாடு எதிர்கொள்ளும் டொலர் நெருக்கடிக்கு இதுவே சிறந்த தீர்வாகும் என்றும், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் டொலர்களுக்கு இவ்வளவு ஊதியம் வழங்கப்படாவிட்டால், அவர்கள் பணத்தை அனுப்புவதற்கு வேறு சட்டவிரோத வழிகளைத் தேடுவது தவிர்க்க முடியாதது என்றும் அவர் கூறினார்.
புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு பணம் அனுப்புவதற்கான சந்தை விகிதத்தை அரசாங்கம் வழங்கத் தவறினால் அவர்கள் முறைசாரா 'உண்டியல்' பணப் பரிமாற்ற முறைக்கு பழகிவிடுவார்கள் என்றும் அவர் கூறினார்.
இதுவரை மேற்கொள்ளப்பட்ட பணிகளின் பொருளாதார வினைத்திறனை அடைவதற்குத் தேவையான கொள்கைத் தீர்மானங்களை திறைசேரி எடுக்காவிட்டால், அமுல்படுத்தப்பட்ட பணிகள் எதிர்பார்த்த தேசிய பெறுபேறுகளை எட்டாது என அமைச்சர் குறிப்பிட்டார்.
பத்தரமுல்லையில் உள்ள இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் காரியாலயத்தில் நேற்று (05) நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் நாட்டின் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அனுப்பும் ஒவ்வொரு அமெரிக்க டொலருக்கும் குறைந்தபட்சம் ரூ.240 வழங்குவதற்கான முன்மொழிவை ஏற்கனவே அமைச்சரவைக்கு சமர்ப்பித்துள்ளதாக அமைச்சர் கூறினார். (யாழ் நியூஸ்)