தலங்கம பிரதேசத்தில் வாய் பேச முடியாத பெற்றோருக்குப் பிறந்த 11 வயது சிறுமியை ஏமாற்றி விருந்துக்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் டிக்டோக் பிரபலம் கிரி சமன் என்பவர் உட்பட நான்கு இளைஞர்கள் மற்றும் இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட 11 வயது சிறுமி முல்லேரியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ஜனவரி மாதம் முதலாம் திகதி தெஹிவளையில் இடம்பெற்ற விருந்தொன்றில் கலந்துகொள்வதற்காக சிறுமி வீட்டை விட்டுச் சென்றிருந்த நிலையில், மறுநாள் அவர் வீடு திரும்பவில்லை என அவரது பெற்றோர் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அன்றைய தினம் பல மணித்தியாலங்களின் பின்னர் சிறுமி வீடு திரும்பியிருந்த போதிலும் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் முல்லேரியா வைத்தியசாலைக்கு சிறுமி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். இதன் போது குறித்த சிறுமி ஆபத்தான போதைப்பொருள் உட்கொண்டதை சட்ட வைத்திய அதிகாரி சன்ன பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்.அதனை தொடர்ந்து பொலிஸாரால் இந்த செயல்கள் தொடர்பான தகவல்களைக் கண்டறிய முடிந்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த சிறுமி வாட்ஸ்அப் மூலம் பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார். பின்னர் அவர் மட்டக்குளியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரையும் ராஜகிரியவைச் சேர்ந்த டிக்டோக் கிரி சமன் என்பவரையும் அடையாளம் கண்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
டிக்டோக் கிரி சமன் என்பவரால் சிறுமி விருந்திற்கு வருமாறு அழைப்பு விடுத்ததற்கமைய சிறுமியின் பெற்றோர் மற்றும் சகோதரனுக்கு தெரியாமல் டிசம்பர் மாதத்தின் ஒருநாள் நள்ளிரவு 12 மணிக்கு வீட்டில் இருந்து விருந்திற்கு சென்று அதிகாலை 4 மணியளவில் அவர் வீட்டிற்கு வந்துள்ளார் என சிறுமியின் வாக்குமூலத்தில் தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் சிறுமியை டிக் டோக் கிரி சமன் என்பவர் அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும், அவருடன் இருந்த மற்றொரு நபர் சிறுமியுடன் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக சிறுமி குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, டிசம்பர் 20, 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பேலியகொடையில் விருந்து ஒன்றிற்கு செல்வதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சிறுமி வீட்டை விட்டு வெளியேறி மறுநாள் காலை 6.30 மணியளவில் வீடு திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அங்கு டிக்டாக் கிரி சமன் மற்றும் மற்றொரு நபர் சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த விருந்தில் களனியைச் சேர்ந்த இளைஞன் ஒருவரை அடையாளம் கண்ட சிறுமி, ஜனவரி முதலாம் திகதி தெஹிவளையில் இடம்பெற்ற விருந்தொன்றில் அவரது அழைப்பின் பேரில் கலந்து கொண்டுள்ளார். அடுத்த நாள் பிற்பகல் வரை தனது மகள் வீட்டிற்கு வராத நிலையில் பெற்றோர் தலங்கம பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
எனினும் பிற்பகல் சிறுமி வீட்டிற்கு வருகைத்தந்ததாக பெற்றோர் தெரிவித்துள்ளனர். ஒரு சிறிய களிமண் அறைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக சிறுமி கூறினார், ஆனால் அந்த இடம் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என ஒரு பொலிஸ் அதிகாரி கூறியுள்ளார்.
ஒவ்வொரு முறை விருந்துக்கு அழைத்துச் செல்லப்படும்போதும் சிறுமிக்கு பல்வேறு போதைப்பொருட்கள் வழங்கப்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட இளைஞர்கள் 19 மற்றும் 22 வயதுக்குட்பட்டவர்கள் எனவும், இவர்கள் ராஜகிரிய, மட்டக்குளி மற்றும் களனி ஆகிய பகுதிகளை வசிப்பவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மேலும் பலர் கைது செய்யப்பட உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
-tw