ஆபாசமான வகையில் கருத்துக்களை வெளியிடுவதை தடை செய்யும் வகையில் தயாரிக்கப்பட்ட சட்ட வர்த்தமானி அறிவித்தலை இரத்துச் செய்யுமாறு நீதி அமைச்சர் அலி சப்ரி பணிப்புரை விடுத்துள்ளதாக நீதி அமைச்சின் செயலாளர் எம்.எம்.பீ.கே.மாயாதுன்ன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சிறுவயது பிள்ளைகளின் நலன்கள் மற்றும் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகும் பெண்கள் உள்ளிட்டோரின் தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை இலக்காகக் கொண்டே இந்தச் சட்டம் அறிமுக்கப்படுத்தப்பட்டதே தவிர கருத்து சுதந்திரத்தை முடக்குவதற்காக அல்ல.
இது தொடர்பில் சிவில் அமைப்புகள், இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், குற்றவியல் சட்டங்கள் மறுசீரமைப்பு தொடர்பான உப குழு மற்றும் இவ்விடயத்தில் பொறுப்புடன் செயற்படுவோரது நிலைப்பாடுகள் கோரப்பட்டு, அவற்றை உள்ளடக்கிய திருத்தங்களுடன் குறித்த சட்ட மூலத்தை மீள சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.