1926ம் ஆண்டு காலங்களில் இந்தியாவில் மர்ஹூம் மெளலான இல்யாஸ் (றஹ்) அவர்களினால் ஆரம்பிக்கபட்டு இன்று உலக நாடுகளுக்கு அல்லாஹ்வின் கட்டளை, இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறையை பின்பற்ற செய்யப்படும் பிரச்சாரப் பணியை தொடர்கின்ற ஒரு மிக முக்கியமான அமைப்பான தப்லீக் ஜமாத் உட்பட இஸ்லாமிய பிரச்சாரப் பணி செய்யும் அனைத்து இயக்கங்களையும் தடை செய்து மீண்டும் இருண்ட யுகத்தை நோக்கி நகரச் செய்யும் சவூதி அரேபியாவின் இளவரசர் முஹம்மத் பின் சல்மான் என்கிற MBS இன் செயல்பாடு இஸ்லாமிய விரோத சக்திகளுக்கு உந்துதலாக அமையும்.
அல்லாஹ்வின் ஏவலுக்கு அமைய உத்தம நபி (ஸல்) அவர்கள் முன்னெடுத்த பிரச்சாரப் பணியை அவருடைய மறைவுக்கு பின்பும் அந்த பணியை மேற்கொள்வதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பிறந்த தாயகத்தில் இருந்து அதற்கு எதிர்ப்பு வந்துள்ளமை பெரும் கவலைக்குரியதாகும்.
மேலைத்தேய நாட்டில் கல்வி கற்று, அந்தக்கலாச்சாரத்தில் மூழ்கி அதே கலாச்சாரத்தை சவூதி அரேபியாவிலும் ஏற்படுத்தி இன்று சவூதி மக்களாலும் அனைத்து ஏனைய நாடுகளில் இருக்கும் முஸ்லீம் சமூகத்திடத்திலும் வெறுப்பை பெற்றுவரும் முஹம்மத் பின் சல்மான் சவூதி தலைநகர் மற்றும் ஏனைய நகரங்களில் இஸ்லாம் தடை செய்துள்ள சினிமா தியேட்டர்கள், மதுபான விற்பனை நிலையம், அழகுராணிப் போட்டி, நைட்கிலப் என்று மார்க்கத்துக்கு புறம்பான பல புதிய விடயங்களை உறுவாக்கியது மட்டுமன்றி அதற்கெதிராக குரல் கொடுக்கும் இஸ்லாமிய அறிஞர்களை சிறையில் அடைத்துள்ளதுடன் அவருடைய இந்த செயலை உலகுக்கு சொல்லும் ஊடகவியலாளர்களை அடக்கி தற்போது உலகிற்கு மார்க்க தஹ்வாப் போதனைகள் செய்யும் தப்லீஹ் ஜமாத் மற்றும் ஏனைய இயக்கங்களை தடைசெய்துள்ளது சவூதி அரேபியாவில் இஸ்லாமிய கோட்பாடுகளுக்கு விரோதமான ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவே அன்றி வேறொன்றுமில்லை.
அல்லாஹ்வின் மார்க்கத்தையும் அதனை போதித்த எமது நபியின் வாழ்க்கை வழிமுறைக்கும் எமது அன்பு நபி (ஸல்) அவர்கள் பிறந்த அரபு நாட்டிலே அதற்கெதிரான சூழலை உருவாக்கி முழு உலக முஸ்லீம்களின் எதிப்பையும் அல்லாஹ்வின் கோபத்துக்கும் ஆளாகியுள்ள சவூதி நாட்டின் இளவரசர் மீண்டும் இந்தத் தடைகளை மீள்பரிசீலனை செய்து இந்தத் தடைகளை இல்லாமல் செய்ய வேண்டும்.
ஏனெனில் நாமறிந்து தப்லீக் ஜமாத் அமைப்பு என்பது அடிப்படைவாதத்தையோ, தீவிரவாதத்தையோ போதிக்கும் ஓர் இயக்கமல்ல மாறாக தமது சொந்தப் பணம், காலம் நேரத்தை தியாகம் செய்து மக்களின் காலடிக்குச் சென்று இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துச் சொல்லி பாவங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் ஏவலை 23 வருடகாலம் மக்களுக்கு சொல்லிக்கொடுத்த கண்மணி முஹம்மத் (ஸல்) அவர்களின் வாழ்க்கை வழிமுறைகளை கியாமத் நாள் வரைக்கும் நாங்கள் வாழும் நாட்டு சட்டங்களை மதித்து மார்க்கத்தை போதிக்கும் ஒரு மிக முக்கியமான பணியை மென்மையான முறையில் எடுத்துச் சொல்லும் இயக்கமேயாகும்.
இந்த இயக்கத்தை சவூதி அரேபியாவில் தடை செய்திருப்பது முஸ்லீம்கள் சிறுபான்மையாக வாழும் நாடுகளில் முஸ்லீம் விரோத சக்திகள் குறித்த இயக்கத்தை தவறாக புரிந்துகொள்ளும் அதேநேரம் சவூதி இளவரசரின் இஸ்லாமிய விரோத செயற்பாடுகள் மூலம் இஸ்லாமொபோபியாக்கள் மேலும் இஸ்லாத்தை தவறாக எடுத்துக்காட்டுவதற்கு பயன்படுத்தப்படும் என்பதில் சந்தேகமில்லை.
சவுதி அரேபியாவின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கை போன்ற சிறுபான்மையாக முஸ்லிம்கள் வாழும் நாடுகளில் உள்ள இனவாத இயக்கங்கள் தற்போது இதனை தூக்கிப் பிடித்துள்ளதை நாம் அவதானிக்க முடிகிறது.
குறிப்பாக இந்தியாவின் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பு மற்றும் இலங்கையின் பொது பல சேனா போன்றவை தப்லீக் ஜமாஅத் அமைப்பை இலங்கை இந்தியாவில் தடை செய்ய வேண்டும் என தெரிவித்து வருகின்றமை சவுதியின் தவறான அடிப்படையற்ற அறிவிப்பின் வெளிப்பாடு என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினரும் SJB கண்டி மாவட்ட அமைப்பாளருமான ஹிதாயத் சத்தார் மேலும் தெரிவித்தார்.