பாகிஸ்தானில் அடித்து எரித்துக் கொல்லப்பட்ட இலங்கை பொறியியலாளரான பிரியந்த குமார தியவடனவின் உடற்பாகங்கள் தாங்கிய விமானம், கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்றுமுன்னர் தரையிறங்கியது.
பாகிஸ்தான் லாகூர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஸ்ரீ லங்கன் விமான சேவைக்குச் சொந்தமான யு.எல்-186 விமானம், தரையிறங்கியது.
கொலை செய்யப்பட்ட பிரியந்த குமாராவின் பிரேத பரிசோதனை சியால்கோட்டின் அராமா இகுபால் போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது, பின்னர் அவரது உடல் 1122 ஆம்பியூலன்ஸ் மூலம் பலத்த பாதுகாப்புடன் லாகூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.
இந் நிலையில் இன்றைய தினம் உடல் ஆம்பியூலன்ஸ் மூலமாக லாகூர் விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது.
அங்கு பஞ்சாப் சிறுபான்மை விவகார அமைச்சர் இஜாஸ் ஆலம் அகஸ்டின் ஸ்ரீலங்கன் ஏயர்லைன்ஸ் விமானம் மூலத்தில் அரசு மரியாதையுடன் பிரியந்த குமாரவின் உடலை அனுப்பி வைத்தார்.
சமய நல்லிணக்கம் தொடர்பான பாகிஸ்தான் பிரதமரின் விசேட பிரதிநிதி ஹாபிஸ் மொஹமட் தாஹிர் அஷ்ரபி, இலங்கையின் தூதுவர் யாசின் ஜோயா மற்றும் பஞ்சாப் உள்துறை மற்றும் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பிரதிநிதிகள் உட்பட ஏனைய அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
49 வயதான பிரியந்த குமாரவின் கொலை குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய மொத்தம் 131 நபர்களை இதுவரை கைதுசெய்துள்ளதாக பஞ்சாப் காவல்துறையினர் திங்களன்று தெரிவித்துள்ளனர்.
இந்த 131 பேரில் 26 நபர்கள் கொலையுடன் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளாக கருதப்படுகின்றனர்.