பாலிவுட் பிரபலங்களான ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கு சுகேஷ் சந்திரசேகர் வழங்கிய மதிப்புமிக்க பரிசு பொருட்களை பறிமுதல் செய்ய இந்தியாவின் அமலாக்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்திய ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை ஜாக்குலின் பெர்னாண்டஸுக்கு 10 கோடி ரூபா மற்றும் அதற்கு மேற்பட்ட பரிசுகளை சுகேஷ் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
ஜாக்குலின் மட்டுமல்லாமல் அமெரிக்காவில் வசிக்கும் அவரின் சகோதரிக்கு 1.5 லட்சம் அமெரிக்க டொலர் கடன் கொடுத்ததுடன், அவரின் தாயாருக்கும் பரிசுகளை வழங்கியுள்ளமை விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே, சுகேஷ் தனக்கு கார் மற்றும் பரிசுப்பொருள்கள் கொடுத்ததாகவும், அவற்றைத் மீள வழங்க தான் தயாராக இருப்பதாகவும் நோரா ஃபதேஹி ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், அவர்கள் ஜாக்குலின் மற்றும் நோராவிடம் வழங்கப்பட்ட பரிசுகள் மற்றும் பிற பொருட்களை பறிமுதல் செய்ய உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபரை பிணையில் வெளியில் எடுப்பதாகக் கூறி சுகேஷ் சந்திரசேகர் என்பவர் 200 கோடி ரூபாவை தொழிலதிபரின் மனைவியிடமிருந்து மிரட்டிப் பெற்றுள்ளார்.
இவ்வாறு பெறப்பட்ட பணத்தை நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், நோரா பதேஹி ஆகியோருக்குச் சுகேஷ் செலவு செய்துள்ளார்.
இந்நிலையிலேயே, ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் நோரா ஃபதேஹி ஆகியோருக்கு சுகேஷ் சந்திரசேகர் வழங்கிய மதிப்புமிக்க பரிசு பொருட்களை பறிமுதல் செய்ய இந்தியாவின் அமலாக்க துறை நடவடிக்கை எடுத்துள்ளது.