வேலைத்திட்டங்களுக்காக இலங்கைக்கு வந்த சீன பிரஜைகள், இலங்கை யுவதிகளை திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் சென்று பலவந்தமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சம்பவம் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு சீனாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட 10 இலங்கை யுவதிகள் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக சிரேஷ்ட பாதுகாப்பு பிரிவின் பிரதானியொருவர் தெரிவித்தாா்.
ஏழைக் குடும்பங்களிலுள்ள அழகிய பெண்களை திருமணம் செய்து, பின்னர் அவர்களை சீனாவுக்கு அழைத்துச் சென்று இரவு நேரங்களில் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளனா்.
இவ்வாறு, ஹொரணை பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவரை திருமணம் செய்து சீனாவுக்கு அழைத்துச் செல்ல முயற்சித்த சந்தர்ப்பத்தில் கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட தீவிர விசாரணையில் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவந்துள்ளது.
இதுபோன்ற சம்பவங்களின் காரணமாகவே, வெளிநாட்டு பிரஜை ஒருவரை திருமணம் செய்து கொள்வதற்கு இலங்கையர்கள் பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று இலங்கை அரசு புதிய சுற்றறிக்கை வெளியிட்டதாக உயர் பாதுகாப்பு பிரதானி ஒருவர் தெரிவித்தாா்.
அடிப்படைவாத மத கருத்துகளை பரப்பி, புகலிடம் கோரி வருகைத்தரும் அல்லது சமூக வலைத்தளங்களில் இடம்பெறும் பண வர்த்தகங்களுக்காக இலங்கையர்களை திருமணம் செய்து இந்த நாட்டில் தங்கியிருந்து சூழ்ச்சி திட்டங்களை வகுத்ததன் பின்னர் இவ்வாறான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தா்ா.
நைஜீரியா பண வர்த்தகங்களுடன் தொடர்புடைய சிலர் இலங்கையர்களை திருமணம் செய்து கொண்டு இந்த நாட்டிலேயே தங்கி விசா பெற்றுக்கொள்ள விண்ணப்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டாா்.