ஜோ பைடன் மற்றும் மார்க் ஜுக்கர்பெர்க் ஆகியோரைக் கொல்லத் திட்டமிட்டதாகக் கூறப்படும் கலிபோர்னியா நபரொருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்.
ஆயுதம் ஏந்திய கலிபோர்னியாவைச் சேர்ந்த நபர் ஒருவர் வெள்ளை மாளிகைக்குச் செல்லும் வழியில் அயோவா எனும் பகுதியில் வைத்து அண்மையில் கைது செய்யப்பட்டார்.
அந்த நபரிடம் துப்பாக்கி மற்றும் வெடிமருந்துகள் இருந்ததாகவும், ஜனாதிபதி ஜோ பிடன், ஜனாதிபதியின் தலைமை மருத்துவ ஆலோசகர் டாக்டர் அந்தோனி ஃபௌசி, Meta (Facebook) நிறுவன CEO மார்க் சக்கர்பேர்க் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன் மற்றும் பராக் ஒபாமா ஆகியோரின் பெயரிடப்பட்ட "ஹிட் லிஸ்ட்" ஒன்றும் அவரிடம் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
கிரிமினல் புகாரின்படி, அவர் ஆக்ரோஷமாக வாகனம் ஓட்டுவதை காவல்துறையினர் கவனித்த பின்னர், கடந்த டிசம்பர் 21 அன்று அவர் வாகனம் ஓட்டும்போது காவல்துறையினரால் மடக்கி பிடிக்கப்பட்டார். அந்த நபரின் நடத்தை காரணமாக அவர் குற்றச் செயல்களுக்கு திட்டமிட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர்.
அவரிடம் கேள்விகள் எழுப்பட்டபோது, குழந்தைகள் மீதான பாலியல் துஷ்பிரயோகம் காரணமாக அரசாங்கத்திற்கு எதிரான தனது கருத்தை முன்வைத்து அவர் பேசத் தொடங்கினார், அவற்றில் சில ஜனாதிபதி ஜோ பைடனால் நிகழ்ந்தன என்றும் அவர் கூறியிருந்தார்.
பின்னர் சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக காஸ் கவுண்டி ஷெரிப் அலுவலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
விசாரணையின் போது, அந்த நபர் இரண்டு மாதங்களுக்கு முன்பு வரை மெர்சிட் - கலிபோர்னியாவில் உள்ள ஒரு மளிகைக் கடையில் பணிபுரிந்ததாகவும், வெள்ளை மாளிகையில் உள்ள தீய சக்திகளை எதிர்த்துப் போராட கடவுளால் அழைக்கப்படும் வரை அங்கு வேலை செய்து வந்ததாக அதிகாரிகளிடம் கூறினார்.
மேலும் "அமெரிக்காவை தீமையிலிருந்து விடுவிக்கும் ஒரே நபர் தான் தான் என்றும், அதனை நிறைவேற்ற அதிகாரப் பதவியில் இருப்பவர்களைக் கொலை செய்வது கட்டாயம்" என்றும் தான் நம்புவதாக அந்த நபர் கூறியதாகவும், அதனால், அந்தச் செயலைச் செய்வதற்கான வெடிமருந்துகள், உடல் கவசம், மருத்துவப் பொருட்கள், ஆடைகள், உணவு மற்றும் பணத்துடன் கூடிய தாக்குதல் துப்பாக்கிகள் போன்ற உபகரணங்களைச் சேகரிக்கத் தொடங்கியதாகவும் அவர் கூறியதாக காவல்துறையினர் தெரிவித்தனர். (யாழ் நியூஸ்)