மாகாணங்களுக்கிடையில் பயணிக்கும் போது, தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் பெற்றுக்கொண்டதை உறுதிப்படுத்தும் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க வேண்டும் என, ராகம மருத்துவ பீடத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அர்ஜுன டி சில்வா, அரசாங்கத்துக்கு ஆலோசனை தெரிவித்துள்ளார்.
ஹோட்டல்கள் மற்றும் நெரிசலான இடங்களுக்குச் செல்லும் நபர்களின் தடுப்பூசி அட்டைகளை கட்டாயம் சரிபார்த்து, அவர்கள் இரண்டு டோஸ்களையும் பெற்றுள்ளனரா என்பதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும்
உலகெங்கிலும் உள்ள பல நாடுகள், இந்த வழிமுறையை செயற்படுத்தி வெற்றிகரமான முடிவுகளை எட்டியுள்ளன என்றார்.
இவ்வாறானதொரு வேலைத்திட்டத்தை மேற்கொள்வதன் மூலம், மாகாணத்திலிருந்து மாகாணத்துக்கு தொற்று பரவுவதைக் கணிசமாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும், குறிப்பாக இளைய தலைமுறையினர் தடுப்பூசி போடுவதற்கு இது உத்வேகத்தை ஏற்படுத்தும் என்றும் குறிப்பிட்டார்.
அதேவேளை, கொரோனா வைரஸின் புதிய திரிபுகள் நாட்டில் தொடர்ந்து வெளிப்படும் என்று கூறிய பேராசிரியர், தடுப்பூசி மற்றும் அடிப்படை சுகாதார விதிகளை தொடர்ந்து பின்பற்றுவதே புதிய திரிபுகளிலிருந்து விடுபட ஒரே வழி என்று சுட்டிக்காட்டினார்.