திம்புள்ள - பத்தனை காவல்துறை பிரிவுக்குட்பட்ட பெய்திலி தோட்ட குடியிருப்பொன்றில் இன்று (30) மாலை 6.00 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று ஏற்பட்டுள்ளது.
வீட்டில் இருந்த சமையல் எரிவாயு கொள்கலனில் பொருத்தப்பட்டிருந்த ரெகுலேட்டர் வெடித்துள்ளதுடன் அதற்கான இறப்பர் குழாயும் முழுமையாக எரிந்துள்ளது.
வெடிப்பு மற்றும் தீப்பரவல் காரணமாக, சமையல் எரிவாயு முழுமையாக சேதமடைந்துள்ளதுடன் வீட்டின் மின் கட்டமைப்பு மற்றும் ஏனைய பொருட்களும் சேதமடைந்துள்ளன.
சமையலறையில் எவரும் இல்லாததன் காரணமாக எவருக்கும் தீக்காயங்களோ அல்லது உயிராபத்துக்களோ ஏற்படவில்லை.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கொள்வனவு செய்யப்பட்ட சமையல் எரிவாயு கொள்கலனிலேயே இவ்வாறு கசிவு ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த எரிவாயு கொள்கலன் வீட்டாரினால் வெளியே எரியப்பட்டதால், ஏற்படவிருந்த பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதாகவும், அயலவர்களால் தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதாகவும் காவல்துறையினரிடம் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இவ்விடயம் சம்பந்தமாக குறித்த பகுதிக்கான கிராம உத்தியோகத்தருக்கும் திம்புள்ள - பத்தனை காவல்துறையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.