சமையல் எரிவாயு கொள்கலன்களுடன் தொடர்புடைய வெடிப்பு சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு, தீர்வுகளை முன்வைக்க ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாந்த வல்பலகேவின் தலைமையில் 08 பேரடங்கிய இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழுவின் ஏனைய உறுப்பினர்களாக சிரேஷ்ட பிரதி காவல்துறைமா அதிபர் தேசபந்து தென்னகோன், மொரட்டுவ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அஜித் டி சில்வா, ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் டபிள்யூ.டி.டபிள்யூ. ஜயதிலக்க, பேராசிரியர் பிரதீப் ஜயவீர, இலங்கை புத்தாக்குனர் ஆணைக்குழுவின் ஆணையாளர் பேராசிரியர் நாராயண் சிறிமுத்து, கைத்தொழில் தொழில்நுட்ப நிறுவகத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் கலாநிதி சுதர்ஷன சோமசிறி மற்றும் இலங்கை தரநிர்ணய கட்டளைகள் நிறுவகத்தின் சிரேஷ்ட பிரதிப் பணிப்பாளர் சுஜீவ மஹகம ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சம்பந்தப்பட்ட சகல தரப்பினரிடம் விசாரணை மேற்கொள்வதுடன், தற்போதுள்ள ஆய்வுகள், பல்வேறு கருத்துக்களை ஆராய்ந்தும் இரண்டு வாரங்களுக்குள் அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மேற்படி குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.