வாடகை அல்லது குத்தகை வீடுகளில் குடியிருப்போர் மற்றும் அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்கள் ஏனைய தகுதிகளைப் பூர்த்தி செய்திருந்தால், தமது சாதாரண குடியிருப்பு முகவரியில் வாக்காளராகப் பதிவுசெய்து கொள்ள முடியும் என தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதற்கமைய சொத்துரிமை குறித்து கவனம் செலுத்தப்படமாட்டாது என தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், இவ்வாறு வாக்காளர் பட்டியலில் பதிவு செய்வதற்கு சொத்து உரிமையாளரின் விருப்பம் அல்லது இணக்கம் தேவையில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், வாக்காளராக பதிவு செய்து கொள்வதற்கு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பதானது, நீதிமன்றத்தின் ஊடாக அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிப்பதற்குரிய தவறாகும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
இதேவேளை, குறித்த நிலைமைகளுக்கு அமைய வாக்காளராகப் பதிவு செய்ய முடியாத நபர்கள் இருந்தால், எதிர்வரும் 17ஆம் திகதிக்கு முன்னதாக மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் தமது கோரிக்கையை சமர்ப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இதற்கான விண்ணப்பப் படிவத்தை elections.gov.lk எனும் இணையதளத்தின் ஊடாக பதிவிறக்கிக்கொள்ள முடியும் எனவும், அனைத்து கிராம உத்தியோகத்தர் அலுவலகங்கள், பிரதேச செயலாளர் அலுவலகங்கள், உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலும் விண்ணப்பப் படிவங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், 011286 00 31, 0112 86 00 32 அல்லது 0112 86 00 34 எனும் தொலைபேசி இலக்கங்களின் ஊடாக மேலதிக விபரங்களைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.