ஞானசார தேரர் தலைமையிலான ஜனாதிபதி செயலணியின் நியமனம் தொடர்பில் பலத்த அதிருப்தியடைந்துள்ள நீதியமைச்சர் அலி சப்ரி தனது பதவியை இராஜினாமாச் செய்ய தீர்மானித்துள்ளதாகவும் தனது தீர்மானத்தில் அவர் உறுதியாகவுள்ளதாகவும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தன.
நீதித்துறைக்குப் பொறுப்பான அமைச்சராக தான் உள்ள நிலையில், சட்டத்திருத்தம் ஒன்று தொடர்பில் ஆலோசனை வழங்குவதற்கான செயலணியின் தலைவராக தகுதியற்ற, சர்ச்சைக்குரிய நபர் ஒருவரை நியமித்துள்ளமையானது தன்னை அவமதிக்கும் செயல் என்றும் நீதியமைச்சர் அலி சப்ரி தன்னைச் சந்தித்த முஸ்லிம் பிரமுகர்களிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.
‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்ற கொள்கையை அமுல்படுத்துவதற்கான சட்ட மூலத்துக்கு ஆலோசனை வழங்குவதற்காக ஞானசார தேரரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள செயலணி நீதித்துறைக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எனக்குத் தெரியாமல், எமது ஆலோசனை இன்றி நியமிக்கப்பட்டுள்ளது. ஞானசார தேரருடன் இணங்கிப்போவது கடினம். அதனால் நான் நீதி அமைச்சுப் பதவியிலிருந்து விலகிக் கொள்ள தீர்மானித்துள்ளேன்” என நீதியமைச்சர் அலி சப்ரி நேற்று முன்தினம் தன்னைச் சந்தித்த முஸ்லிம் பிரமுகர்களிடம் தெரிவித்துள்ளார்.
நீதியமைச்சரின் இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற இச்சந்திப்பில் வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன், வை.எம்.எம்.ஏ. தேசியத் தலைவர் சஹீட் எம் ரிஸ்மி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டிருந்தனர்.
அங்கு நீதியமைச்சர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில் “ ‘ஒரே நாடு – ஒரே சட்டம்’ என்பதற்கான கொள்கைகள் அனைவரும் இலங்கையர் என்ற அடிப்படையில் வடிவமைக்கப்பட்டுவரும் நிலையில் திடீரென செயலணியொன்று நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி நாடு திரும்பியதும் இது தொடர்பில் விளக்கமளிக்கவுள்ளேன். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் அரசியலுக்கு அப்பால் எனக்கு இறுக்கமான நட்பு இருக்கிறது. அரசியலிலிருந்து ஒதுங்கிக்கொண்டாலும் நான் அவருக்கு விசுவாசமாகவே இருப்பேன். அமைச்சரவையில் எனக்கு மரியாதை வழங்கப்படுகிறது. அமைச்சரவைக்குள் இருந்தால் பிரச்சினைகளை ஓரளவு தீர்க்க முடியும் என்பதை நானறிவேன்.
அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், முஸ்லிம் எம்பிக்கள் மற்றும் உயர் மட்ட அதிகாரிகள் நான் எனது பதவியை இராஜினாமா செய்யக்கூடாது என்றே கோருகிறார்கள். பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் நான் பதவியில் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பது அவர்களுக்குப்பலம் என்று தெரிவிக்கிறார். என்றாலும் எமது சமூகம் என்னைப் புரிந்து கொள்ளாமலிருக்கிறது.
நீதித்துறையில் மாற்றங்களையும், திருத்தங்களையும் கொண்டுவருவதற்கு 30 குழுக்களை அமைத்துள்ளேன். நீதியமைச்சின் அதிகாரிகள் நூற்றுக்கு நூறுவீதம் எனக்கு ஒத்துழைக்கிறார்கள். நான் பதவி விலகினால் இவர்களும் ஒதுங்கிக் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.
இதேவேளை, நாட்டில் சட்டங்களை இயற்றுவதற்கு சட்ட ரீதியான நிறுவனங்கள் இருக்கும்போது இவ்வாறான செயலணி நியமிக்கப்பட்டுள்ளது தேவையற்ற ஒரு விடயமாகும். இதனால் நான் இது தொடர்பில் அதிருப்பதியடைந்துள்ளேன். எனது ஆலேசனை பெற்றுக்கொள்ளப்படாமலே இச்செயலணி நியமிக்கப்பட்டுள்ளது என அலி சப்ரி ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு கடந்த வாரம் தெரிவித்திருந்தார்.
இதனிடையே, பொது ஜன பெரமுனவின் ஐந்தாவது ஆண்டு பூர்த்தி நிகழ்வு நேற்று முன்தினம் கொழும்பில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளும் தரப்புக்கு ஆதரவான முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் நீதியமைச்சர் அலி சப்ரிக்குமிடையில் இவ்விவகாரம் தொடர்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இதன்போதும் ஜனாதிபதியின் தீர்மானம் குறித்து தான் பலத்த அதிருப்தியில் இருப்பதாகவும் பதவியை இராஜினாமாச் செய்வதைத் தவிர வேறு வழியில்லை என அழுத்தமாகக் குறிப்பிட்டதாகவும் அச் சந்திப்பில் பங்குபற்றிய முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இதனிடையே தற்போதைய அமைச்சரவையில் ஒரேயொரு முஸ்லிம் பிரதிநிதியான அலி சப்ரி உள்ள நிலையில், அவரும் அப் பதவியை இராஜினாமாச் செய்வதானது எதிர்காலத்தில் சமூகம் தொடர்பான முக்கிய விவகாரங்களை அமைச்சரவையில் பேசுவதற்கான வாய்ப்பை இல்லாதொழித்துவிடும் என சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர். இதன் காரணமாக பதவியை இராஜினாமாச் செய்வதைத் தவிர்த்து அமைச்சரவையில் உள்ளிருந்தே இந்த செயலணி பற்றிய எதிர்ப்பை தெரிவிக்குமாறும் சிலர் அமைச்சருக்கு ஆலோசனை வழங்கியுள்ளதாக அறிய முடிகின்றது.
இதேவேளை, நாட்டின் மிகப் பெரிய சட்டத்துறைசார் அமைப்பான இலங்கை சட்டத்தரணிகள் சங்கமும் இந்த செயலணி தொடர்பில் பலத்த கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளதுடன் தமது அமைப்பின் உறுப்பினர் என்ற வகையில் அமைச்சர் அலி சப்ரி மீது அழுத்தங்களைப் பிரயோகித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
நன்றி: விடிவெள்ளி (ஏ.ஆர்.ஏ.பரீல்)