ஒரே நாடு ஒரே சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை காரணமாக அதிருப்தியடைந்த நீதி அமைச்சர் அலி சப்ரி, தனது பதவியை இராஜினாமா செய்ய தயாராகி வருவதாக வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என அமைச்சரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
வெளிநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி நாடு திரும்பிய பின்னர் தனது இராஜினாமா கடிதத்தை கையளிக்க தயாராகி வருவதாகவும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன என்று செய்தி வெளியாகியிருந்த நிலையிலேயே இந்த செய்தியை அமைச்சரின் ஊடகப் பிரிவு வெளியிட்டது.
ஓரே நாடு ஒரே சட்டம் ஜனாதிபதி செயலணி நியமிக்கப்பட்டமை தொடர்பில் தனக்குத் தெரியாது என்றும் தம்மை கலந்தாலோசிக்காமல் செயலணியை நியமித்ததில் அதிருப்தி அடைவதாகவும் அண்மையில் 'சண்டே டைம்ஸ்' பத்திரிகைக்கு வழங்கியிருந்த செவ்வியொன்றில் அமைச்சர் தெரிவித்திருந்தார்.
நாட்டில் சட்டங்களை உருவாக்குவதற்கு குறிப்பிட்ட நிறுவனங்கள் இருக்கும் போது இவ்வாறான செயலணிகளை அமைப்பதில் அர்த்தமில்லை என நீதி அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
நீதி தீர்த்தல் மற்றும் நடைமுறைப்படுத்துதல் சட்டத்தின் பாதுகாப்பும் சர்வசாதாரணமாக வேண்டுமென்பதைக் கவனத்தில் கொண்டு “ஒரே நாடு - ஒரே சட்டம்” என்பதற்கான ஜனாதிபதி செயலணி பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைமையில் இந்த 13 உறுப்பினர்களைக் கொண்டு நியமிக்கப்பட்டது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 26ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலிலேயே இவ்விடயம் அறிவிக்கப்பட்டிருந்தரத குறிப்பிடத்தக்கது.
-தமிழ் மிரர்