பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதியை நபர் ஒருவர் தாக்க முயன்ற வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
தென்னிந்தியத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய் சேதுபதி; தற்போது இந்தியில் உருவாகும் வெப் சீரிஸ் ஒன்றில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடித்துவரும் 'விக்ரம்' படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், பெங்களூரு விமான நிலையத்தில் நடிகர் விஜய் சேதுபதி மீது அடையாளம் தெரியாத நபர் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக இணையத்தில் பரவும் வீடியோ பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் விமான நிலையத்தில் பாதுகாப்புப் படை வீரர்களுடன் சென்று கொண்டிருக்கும் விஜய் சேதுபதியை பின்னால் இருந்து ஒடி வந்து ஒருவர் உதைக்கிறார்.
உடனடியாக விஜய் சேதுபதியுடன் வந்த சிலரும் பாதுகாப்புப் படை வீரர்களும் அந்த நபரைப் பிடிக்க முயல்கின்றனர். இந்த திடீர் தாக்குதலால் சற்று நிலைதடுமாறிய விஜய் சேதுபதியும் தன்னை தாக்கிய நபரை நோக்கி செல்கிறார். இதனால் அந்த இடத்தில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்படுகிறது. சுமார் 10 நொடிகள் மட்டுமே இருக்கும் இந்த வீடியோ இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாகப் பெங்களூரு விமான நிலையம் தரப்பில் இருந்தோ நடிகர் விஜய் சேதுபதி தரப்பில் இருந்தோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை. இந்த சம்பவம் விஜய் சேதுபதி ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
-இந்திய ஊடகம்