சமையல் எரிவாயு தொடர்பில் முறையான ஒழுங்குப்படுத்தல் முறைமை இல்லை என்றும், அதற்கு அரசாங்கம் என்ற வகையில் நாங்கள் அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.
இன்று (29) நாடாளுமன்ற விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
2015 ஆம் ஆண்டு முதல் லிட்ரோ மற்றும் லாஃப் சமையல் எரிவாயு கொள்கலன்கள் தொடர்பில் இவ்வாறான 233 சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இதேவேளை, எரிவாயு கொள்கலன் வெடிப்பு மற்றும் தீப்பற்றுதல் உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பில் இன்று நாடாளுமன்றில் வாதப் பிரதிவாதங்கள் இடம்பெற்றன.
இதேவெளை, ஹங்வெல்ல, தித்தெனிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் நேற்றிரவு எரிவாயு அடுப்பு வெடித்துள்ளதாக குறித்த வீட்டில் வசிப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாதுக்க - அருக்வத்தை பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு குழாய் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, ஹட்டன் மல்லியப்பூ சந்தி பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் எரிவாயு கசிவு காரணமாக இன்று காலை வெடிப்பு சம்பவமொன்று பதிவாகியது.
காலை உணவைச் சமைத்துக் கொண்டிருந்த போது இந்த வெடிப்பு ஏற்பட்டதாக குறித்த உணவகத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சமையல் எரிவாயு கொள்கலன் மற்றும் எரிவாயு அடுப்புக்கான குழாயில் வெடிப்பு ஏற்பட்டதால் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.