இந்தோனேஷியாவை சேர்ந்த இளைஞர், 'குக்கரை' திருமணம் செய்து, அதை நான்கு நாட்களில் விவாகரத்தும் செய்துகொண்டு சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேஷியாவை சேர்ந்தவர் கொய்ருல் அனாம். பல்வேறு விதமான அதிரடி சாகசங்களை செய்து அந்த வீடியோக்களை பேஸ்புக் சமூகவலைதளத்தில் வெளியிட்டதன் வாயிலாக பிரபலம் அடைந்தார்.
இவர் கடந்த வாரம் தன் பேஸ்புக் வலைதளத்தில் சில புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். அதில், புது மாப்பிள்ளை போல் ஆடை அணிந்து அமர்ந்திருந்த அவரின் அருகே சாதம் சமைக்கும் வெள்ளை நிற குக்கர் இருந்தது. அந்த குக்கருக்கு புது மணப்பெண்ணைப் போல அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.
குக்கருக்கு முத்தம் கொடுப்பதை போலவும், அதை தன் அருகே வைத்து திருமண ஆவணங்களில் கையெழுத்திடுவது போலவும் பல்வேறு புகைப்படங்களை வெளியிட்டார். 'என் வீட்டு குக்கர், அழகாகவும் தன் உத்தரவுகளுக்கு கீழ்படிவதோடு சிறப்பாகவும் சமைப்பதால் அதை திருமணம் செய்து கொள்கிறேன்' என பதிவு வெளியிட்டார்.
இந்த பதிவு இந்தோனேஷிய சமூகவலைதளங்களில் பெரிதும் கவனிக்கப்பட்டது.
இந்நிலையில் நான்கு நாட்களுக்கு பின், குக்கரை விவாகரத்து செய்துவிட்டதாக மற்றொரு பதிவை வெளியிட்டார். அதில், 'அதற்கு சாதத்தை தவிர வேறு எதுவும் சமைக்க தெரியவில்லை' எனக் கூறி இருந்தார்.
பின்னர் சமூக வலைதள பரபரப்புக்காக இதுபோன்ற ஒரு செயலில் அவர் ஈடுபட்டது தெரியவந்தது.