முஸ்லிம் சமூகத்தின் நலனையே நோக்காகக் கொண்டு நான் பின்பற்றும் அரசியல் வழிமுறைகள், அரசுடனான நல்லுறவு குறித்து விமர்சனங்களை முன்வைப்போர் ஏதுவான மாற்றுவழியை முன்வைக்க வேண்டும். இதன் மூலம் முஸ்லிம் தேசிய பிரச்சினைகளுக்கும், கல்முனை வடக்கு உப பிரதேச செயலக தர முயர்த்தல் தொடர்பில் முஸ்லிம்கள் எதிர் நோக்கும் சவால்களுக்கும் தீர்வு கிடைக்க வேண்டும். அவ்வாறு மாற்றுவழியை முன்வைக்க விரும்பினால் இதற்காக ஓர் தீர்வுத்திட்டத்தை மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் புத்தி ஜீவிகள் கொண்ட ஓர் குழுவினர்கள் முன்னிலையில் அதனை முன்வைப்பதுடன், அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவும் வேண்டும். இவ்வாறு முன்வைக்கப்படும் மாற்று தீர்வுத்திட்டத்தை இக்குழு சரியென ஏற்றுக் கொண்டால், அரசுடனான எனது உறவை விலக்கிக் கொள்வது மட்டுமன்றி எனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் கூட இராஜினாமாச் செய்யவும் தயாராயுள்ளேன் என சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதி தலைவரும், திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
சமகால அரசியல் முன்னெடுப்புகள் தொடர்பில் சமூக வலைத்தளங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே இதனை தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து வெளியிட்ட அவர்,
இதை ஒரு சவாலாக முன்வைக்கவிரும்புகிறேன் என திடமாகக் கூறினார். அரசின் 20 ஆவது அரசியலமைப்புதிருத்தம் நிறைவேற அவர் அளித்த ஆதரவு குறித்தும் தொடரும் அரசசுடனான உறவு குறித்தும் சிலர் முன்வைத்து வரும் விமர்சனங்கள் தொடர்பில் கேள்வி எழுப்பிய போது மேற்கண்ட தமது கருத்துக்களை அவர் உணர்வு பொங்க தெரிவித்தார். எனது நிலைப்பாடு ஒரு சவாலான விடயமாகும். அரசுடன் உறவு வைத்துள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில், பல்வேறு விமர்சனப்பார்வைகளும், அபிப்பிராயபேதங்களும் முன்வைக்கப்படுகின்றன. சில அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்டோர் மாறுபட்ட அபிப்பிராய பேதங்களையும், விசமப்பிரச்சாரங்களையும் முன்னெடுத்துவருகின்றனர்.
குறிப்பாக இன்று நான் பின்பற்றும் அரசியல் வழிமுறை, அதனூடான அரசுடனான உறவு முறை பிழையான தெனவும், அரசுடனான உறவு முறையை முறிக்க வேண்டுமெனவும் இவர்கள் கூறுகின்றனர். எனினும் சமகாலத்தில் எமது அரசியல் வழிமுறைகளை, எமது நிலைப்பாட்டை சகோதர தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் உட்பட அரசு சார்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் முஸ்லிம்களின் இராஜ தந்திர வெற்றி எனக் கணிப்பிடுகின்றனர். ஆனால் எமது சமூகத்திலுள்ள சில பேர் வழிகள், எதிரணியிலிருந்து கொண்டு நாடாளுமன்றத்தில் பேசுவதுதான் சமூகம் எதிர் நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுத்தர வல்லது என்ற மாயைக்குள் சிக்கியுள்ளதோடு அதன்பால் சமூகத்தையும் திசைதிருப்ப முயன்று வருகின்றனர்.
எமது சமூகம் புத்திசாதுர்யமிக்க சமூகமாகும். எனவே நாடாளுமன்ற உரைகளுக்குள்ள சட்ட பூர்வதன்மை பற்றியும் கவனத்திற்கொள்ள வேண்டும். இவை தீர்வாகாது, அத்தோடு அந்த உரைகள் தொடர்பில் எந்த அதிகாரியும் நடைமுறைப்படுத்தக்கூடிய கடப்பாடு இல்லை என தெரிந்தும் அதையொட்டிய அரசியலை எதிர்பார்ப்பது சமூகத்திற்கான தீர்வாக அமையாது. மாறாக அரச அதிகாரத்தை அமுல்படுத்தும் மூலக்கூறுகளான நாட்டின் தலைமை மற்றும் அமைச்சர்களிடம் எமது பிரச்சினைகளைப் பேசி, அவர்களது கவனத்திற்குக் கொண்டு போவதினூடாகவே உரிய தீர்வுகளைக் காண முடியும்.
நாடாளுமன்ற உறுப்பினர் எம்.சீ.அப்துர் ரஹ்மான் தொடக்கம் நூறு வருடகாலமாக அத்தனை அரசியல் தலைமைகளும் பின்பற்றிய வழி முறைகளே இதுவாகும். சாத்தியமான இந்த வழிமுறை முஸ்லிம் சமூகத்திற்குக்கசக்குமென்றால், 1956களில் தமிழ் சமூகம் சிந்தித்தது போன்ற எதிரணி அரசியல் மற்றும் அறவழி போராட்டபாதையை முஸ்லிம் தலைமைகளும் தேர்ந்தெடுக்க நிர்ப்பந்திக்கிறதா என்ற ஐயம் எமக்கு ஏற்படுகின்றது. சஹ்ரானின் மிலேச்சத்தனமானதாக்குதலின் பின் நாட்டில் முஸ்லிம்கள் மீதும், முஸ்லிம் இளைஞர்கள் மீதும் பெரும் பான்மை இனம் சந்தேகப்பார்வைகொண்டுவரும் இக்காலகட்டத்தில், சந்தேகப்பார்வையையும், எதிர்ப்பு உணர்வையும் அகற்றி முஸ்லிம் சமூகத்தைப் பாதுகாக்கும் கால கட்டத்தில் முஸ்லிம் தலைமைகள் கடப்பாடு கொண்டுள்ளன.
ஆனால் இதர சமூக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரின் சொந்த நிகழ்ச்சி நிரலுக்கு நம் சமூக சில இளைஞர்கள் செயற்படுவது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் பாரிய ஆபத்துக்குள் தள்ளிவிடும் அபாயமுள்ளது. இவர்கள் முஸ்லிம் சமூகத்தை வழிநடத்துவதற்கு அனுமதிக்க முடியாது. முஸ்லிம் சமூகம் இன்று எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள், நெருக்கு வாரங்கள் மேலேங்கியுள்ள நிலையில் சமூகத்திற்கு சேதாரம் வந்து விடக்கூடாது என்பதற்காக பேச்சு வார்த்தைகளையும், அரசுடனான உறவையும் கையாளும் நிலமையிலுள்ளோம். தெற்கு ஆட்சியாளர்களால் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் நேரடியாகவே அரசுக்கு சில நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்துள்ளதுடன், தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்குடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசுடன் பேசுவதற்கு தயாராகவுள்ளது என்பதையும் நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். எனவே, தமிழ் அரசியல் தலைமைகள் செய்வது ஹலால், நாம் செய்வது ஹராம் என்றா முஸ்லிம் சமூகம் பார்க்கின்றது” என மேலும் இங்கு கருத்துரைத்தார்.