மினுவாங்கொடை பிரதேசத்தில் டெங்கு நோய் பரவும் வகையில் சூழலை சுத்தப்படுத்தாமல் வைத்திருக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, மினுவாங்கொடை பத்தண்டுவன பிரதேசத்திற்குப் பொறுப்பான பொது சுகாதாரப் பரிசோதகர் பனாகொட தெரிவித்தார்.
மினுவாங்கொடை சுகாதார சேவைப் பிரிவிற்குட்பட்ட வீடுகள், உணவகங்கள் மற்றும் நிறுவனங்கள் ஆகியவற்றில் இந்த வாரம் முதல் டெங்கு நுளம்பு பரவுவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும், இவ்வாறு கவனயீனமாக இருப்பவர்களுக்கு முதற்கட்டமாக அடுத்த வாரம் முதல் சிவப்பு அறிவித்தல் அனுப்பப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கொவிட் தொற்றுக்கு மத்தியில், நாட்டில் தற்போது நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக, டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாகவும், இதனால் எந்நேரமும் தத்தமது வீட்டுச் சூழலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் என்றும் அவர் மினுவாங்கொடை பிரதேச மக்களை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டார்.
மினுவாங்கொடை சுகாதாரப் பிரிவிற்குட்பட்ட கல்லொழுவை, பொல்வத்தை, மிரிஸ்வத்தை, ஜாபாலவத்தை, பத்தண்டுவன மற்றும் புருலப்பிட்டிய பகுதி வாழ் மக்கள், டெங்கு நுளம்பு பரவும் விடயத்தில் மிக அவதானமாக நடந்துகொள்ள வேண்டும் என்றும் அவர் வேண்டிக்கொண்டார்.
ஐ. ஏ. காதிர் கான்
கம்பஹா மாவட்ட நிருபர்