இலங்கையின் கொழும்பு, ரத்மலான விமான நிலையம் 5 தசாப்தங்களுக்குப் பின்னர் சர்வதேச விமான பயணங்களை ஆரம்பிக்க உள்ளது. இதன்படி முதல் விமானம் அடுத்த மாதம் மாலத்தீவுக்குப் புறப்படும் என்று இலங்கையின் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மாலத்தீவு ஏர்லைன்ஸுடன் நீண்ட பேச்சுக்களின் பின்னர், அவர்கள் இரத்மலானையிலிருந்து விமானங்களை மீண்டும் ஆரம்பிக்க ஒப்புக்கொண்டனர்.
ஆரம்பத்தில், 50 பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய விமானம் கொழும்புக்கும் மாலத்தீவுக்கும் இடையே முதலில் சேவையில் ஈடுபடும். ரத்மலான சர்வதேச விமான நிலையம் 1938 இல் அமைக்கப்பட்டது.
1968 இல் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து விமானச்சேவைகள் ஆரம்பிக்கப்பட்டதால் ரத்மலானையின் சேவைகள் இடைநிறுத்தப்பட்டன. ரத்மலான விமான நிலையம் இந்தியா மற்றும் மாலத்தீவை மையமாகக் கொண்ட ஒரு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக உருவாக்கப்படும்.
ரத்மலான விமான நிலையத்தில் சர்வதேச விமானங்களை ஊக்குவிப்பதற்காக விமான நிறுத்துமிடம் மற்றும் தரிப்பிடக் கட்டணத்தை ஒரு வருடத்திற்கு நீக்கவும், பயணிகளிடம் இருந்து விதிக்கப்படும் விமான நிலைய சேவை வரியை நிறுத்தி வைக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.