அரிய பழங்கால பொருட்கள் தன்னிடம் இருப்பதாகக் கூறி பல்வேறு தொழிலதிபர்களிடம் பல கோடி ரூபாய் மோசடி செய்த மோன்சன் மாவுங்கல் என்பவரை கேரள போலீசார் கைது செய்துள்ளனர்.
சதுரங்க வேட்டை படம் பாணியில் நடந்த மோசடியால் கேரளாவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கேரள மாநிலம் ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் மோன்சன் மாவுங்கல். இவர் தெலுங்கு திரையுலகில் சில திரைப்படங்களில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர் தன்னிடம் பல்வேறு அரிய தொல் பொருட்கள் உள்ளதாகக் கூறி, பல முக்கிய தொழிலதிபர்களிடம் இருந்து சுமார் 6.27 கோடி இந்திய ரூபாய் மோசடி செய்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.
மோன்சன் மாவுங்கல் கேரளாவில் சொந்தமாக ஒரு மியூசியம் வைத்துள்ளார். பழங்கால பொருட்களைச் சேகரிப்பவர் என்று கூறிக் கொள்ளும் மோன்சன் மாவுங்கல், பல விவிஐபிகளை தனது மியூசியத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
முன்னாள் அமைச்சர்கள் தொடங்கிய முன்னாள் டி.ஜி.பி லோக்நாத் பெகரா என மோன்சன் மாவுங்கலின் மியூசியத்திற்கு சென்றவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே இருக்கும். வி.வி.ஐ.பி-க்கள் மியூசியத்தில் இருக்கும்போது புகைப்படங்கள் எடுத்துக்கொள்ளும் மோன்சன் மாவுங்கல், இதைக் காட்டி மற்றவர்களை ஏமாற்றியுள்ளார்.
அதாவது விவிஜபிகளின் புகைப்படங்களை மற்ற தொழிலதிபர்களிடம் காட்டும் மோன்சன் மாவுங்கல், தன்னிடம் இருக்கும் பொருட்கள் அனைத்தும் பழங்கால பொருட்கள் என நம்ப வைத்துள்ளார். இதை வைத்து பலரிடமும் கோடிக் கணக்கில் மோன்சன் மாவுங்கல் பண மோசடி செய்துள்ளார்.
சுல்தான் கிரீடம் விற்றதில் தனக்கு 70,000 கோடி ரூபாய் வரவுள்ளதாகக் கூறிய அவர், இதற்காக வரி செலுத்தப் பணம் தேவை என்று சில தொழிலதிபர்களிடம் இருந்து பணத்தைப் பறித்துள்ளார். பணம் கொடுத்து உதவினால் வங்கியில் வட்டி இல்லா கடன் பெற்றுத் தருவதாகக் கூறியதால், பல தொழிலதிபர்களும் மோன்சன் மாவுங்கலுக்கு பணம் கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இது குறித்து சிலர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் மோன்சன் மாவுங்கலை கைது செய்தனர்.
மேலும், அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அதேபோல தன்னிடம் இரிடியம் போன்ற அரிய வகை உலோகங்கள் இருப்பதாகவும் கூறி பலரிடம் ஏமாற்றி பணம் பறித்துள்ளார் மோன்சன் மாவுங்கல். இன்னும் சிலரிடம் தனது வங்கியிலுள்ள 2.62 லட்சம் கோடி ரூபாய் லாக் ஆகிவிட்டதாகவும் இதை மீட்க 10 கோடி ரூபாய் வேண்டும் என்று கூறி பணத்தைச் சுருட்டியுள்ளார்.
இது தொடர்பாக ஆறு பேர் கேரள முதல்வரிடமே நேரடியாகப் புகாரளித்தனர். அதன் பின்னரே விசாரணை தீவிரமடைந்துள்ளது.
இது மட்டுமல்லாது டி.ஜி.பி, முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய புள்ளிகள் தனக்கு நெருக்கமானவர்கள் என்று கூறியும் அவர் பண மோசடி செய்துள்ளார்.
மோன்சன் மாவுங்கல்லுக்கு சொந்தமான இடத்தில் அதிரடி ஆய்வு செய்த போலீசார் ஆடம்பர கார்கள், கேரவன்கள் உட்பட மொத்தம் 21 வாகனங்களைப் பறிமுதல் செய்தனர். மேலும் அவரது மியூசியத்தில் உள்ள பழங்கால பொருட்களின் உண்மைத் தன்மை குறித்தும் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு தொழிலதிபர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் மோசடி செய்த மோன்சன் மாவுங்கல் குறித்து விசாரணையைக் கேரள போலீசார் தற்போது தீவிரப்படுத்தியுள்ளனர்.
-இந்திய ஊடகம்