விடுதலைப் புலிகள் என்ற பெயரிலும் இன்னும் எத்தனையோ பெயர்களை கொண்ட ஆயுதக்குழுக்களின் பெயரிலும் நடத்தப்பட்ட யுத்தம் விடுதலைக்கான யுத்தமல்ல. இதுவிடயம் தொடர்பில் பேச யாராவது தயாராக இருந்தால் அவர்களுக்கு முகம் கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம். இன்றும் முஸ்லிங்களே கறிவேப்பிலையாக பயன்படுத்தப்பட்டுள்ளார்கள். கிறிஸ்தவ தேவாலயத்தில் குண்டுவீச முஸ்லிம் உலமா என்ற பெயரில் அவர்கள் பாவிக்கப்பட்டு முஸ்லிங்கள் மீது பயங்கரவாதிகள் எனும் முத்திரை குத்தப்பட்டிருப்பதும் இந்த நாட்டின் சொத்துக்களையும், வளங்களையும் கொள்ளையடிக்கவே தவிர வேறில்லை என்பதை நாம் அறிந்துகொள்ளாமல் இருக்க முடியாது என தேசிய காங்கிரஸின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்துள்ளார்.
அக்கரைப்பற்று முஸ்லிம் மத்திய கல்லூரி தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டு 29 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சர்வதேச ஆசிரியர் தினத்தன்று கல்லூரியின் "அதாஉல்லா கேட்போர் மண்டபத்தில்" தேசிய பாடசாலை தின விழா கொண்டாடப்பட்ட போது அந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும் தொடர்ந்து உரையாற்றிய அவர்,
கல்வியில் மிகமுக்கியமான கல்வி நாம் ஏன் படைக்கப்பட்டோம் என்பதை அறிந்துகொள்ளும் கல்வியே. இன்றைய காலங்களில் நாம் என்ன பட்டங்களை, பதவிகளை பெற்றாலும் மனங்கள் தூய்மையாக்கப்படாமல், எண்ணங்கள் சீராக இல்லாமல் இளைஞர்கள் வெவ்வேறு திசைகளில் திசைமாற்றப்பட்டு வருகிறார்கள். உலமா என்ற பெயரில் ஸஹ்ரான் பாவிக்கப்பட்டிருக்கிறார். வரலாறுகளை பின்னோக்கி பார்க்கின்ற போது இந்த நாடு அழகும், செழிப்பும் நிறைந்த நாடு. இந்த நாட்டில் தான் இஸ்லாமியர்கள் நம்பும் நபி ஆதம் (அலை) இறக்கப்பட்டார். இந்த மண் வரலாற்றில் மறக்கமுடியாத வளங்களையும், பண்புகளையும் கொண்ட மண்.
காய்த்த மரத்திற்கே கல்லெறி என்பதுபோல இந்த நாடு வளங்களினால் காய்த்த மரம். இந்த நாட்டில் உள்ள வளம் வேறு நாடுகளில் காணமுடியாது. சொர்க்கபுரியாக திகழும் எமது நாட்டில் மற்றவர்கள் கண் வைப்பதில் நியாயம் இருக்கிறது. உலகின் முக்கிய அமைவிடங்களில் ஒன்றாக இலங்கை இருக்கிறது. ஒல்லாந்தர், போத்துக்கேயர், வெள்ளையர்கள் என யாராக இருந்தாலும் வரலாற்றில் முஸ்லிங்களே பாவிக்கப்பட்டுள்ளார்கள். கடந்த காலங்களில் பண மோகம் கொண்ட முஸ்லிங்கள் சிலரும் ஆயுதக்குழுக்களின் பக்கம் கவரப்பட்டனர். சிங்களவர்களில் சிலரும் பணத்திற்காக ஆயுதக்குழுக்களுக்கு ஒத்துழைத்தவர்களும் இல்லாமல் இல்லை.
இந்த நாட்டின் சொத்துக்களை கபளீகரம் செய்வோர்கள் செய்யும் சதிகளில் முஸ்லிம் இளைஞர்கள் சிக்கிக்கொள்ளாமல் காப்பாற்றும் பணியை பாடசாலைகள், பெற்றோர்கள், கல்விமான்கள், கல்வியதிகாரிகள் முன்னெடுக்க வேண்டும். இந்த நாட்டில் ஏன் குண்டுகள் வெடித்தது. ஏன் கிறிஸ்தவ தேவாலயங்களில் வெடித்தது. முஸ்லிங்கள் என்ற பெயரில் ஏன் வெடிக்கச்செய்யப்பட்டது என்பதை நாங்கள் ஆழமாக சிந்திக்க வேண்டும். நாட்டின் வளங்களும், சொத்துக்களும் மிக அவதானமாக பாதுகாப்படவேண்டியவையாக நாம் காண்கிறோம் என்றார்.
-நூருல் ஹுதா உமர்