மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள பாதாள உலக பிரமுகர் தெமட்டகொட சமிந்தவின் சகோதரரான தெமட்டகொட ருவன் என்றழைக்கப்படும் ருவன் சமில பிரசன்ன, குற்றப்புலனாய்வு பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் விசாரணை பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சோதனையின் போது அவரது நான்கு சொகுசு கார்கள் மற்றும் ஒன்றரை கிலோ தங்கம் ஆகியவற்றை பிரிவின் அதிகாரிகள் கைப்பற்றினர்.
கடந்த ஏப்ரல் 10 ஆம் திகதி, இந்திய கடலோரக் காவல்படையினர் இந்தியக் கடற்கரையில் சுமார் 300 கிலோகிராம் ஹெராயின் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது ஹெரோயின் போதைப்பொருள் இலங்கைக்கு கொண்டு செல்லப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்திய அதிகாரிகள் போதைப்பொருள் தடுப்புப் பிரிவிற்குத் தெரிவித்ததையடுத்து, அவர்கள் இலங்கையில் ஒரு குழுவைக் கைது செய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
சந்தேகநபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டதுடன், குறித்த போதைப்பொருள் தெமட்டகொட ருவானுக்கு கொண்டு வரப்படுவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
அதன்படி நேற்று காலை தெமட்டகொட வெலுவான டெரஸில் உள்ள ருவன் சமில பிரசன்னவின் வீட்டிற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினரும், விசேட அதிரடிப்படையினரும் சென்றுள்ளனர்.
அவரது வீட்டில் இருந்து ரேஞ்ச் ரோவர் மற்றும் பிராடோ எஸ்யூவி மற்றும் இரண்டு புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
கைது செய்யப்பட்ட தெமட்டகொட ருவன் சொத்துக் கொள்வனவுக்காக பணம் சம்பாதித்த விதம் தொடர்பான ஆவணங்கள் சட்டவிரோதமானவை என்பதாலேயே அவர் கைது செய்யப்பட்டதாக குற்றப் புலனாய்வுப் பிரிவின் சட்டவிரோத சொத்துக்கள் மற்றும் சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபரான தெமட்டகொட ருவன் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார். (யாழ் நியூஸ்)