அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டு விவகாரத்தில் முரண்பாடுகளை ஏற்படுத்திக் கொள்ள அரசாங்கம் முயற்சிக்கவில்லை. துரிதமாக அதிபர் ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார்.
வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று (06) நடைபெற்ற போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இவ்வாரம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்திலும் அதிபர் - ஆசிரியர்களின் சம்பள முரண்பாடு தொடர்பில் நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.
ஆளுநர்கள் தலைமையில் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் பிரத்தியேக கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்ட போதும் இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டது.
இந்த பிரச்சினையை முரண்பாட்டுடன் தொடர நாம் எதிர்பார்க்கவில்லை. எதிர்காலம் தொடர்பில் சிந்தித்து , துரிதமாக அதிபர் ஆசிரியர் சங்கங்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்து அவர்களது கோரிக்கைகள் தொடர்பில் மத்தியஸ்த்துடன் நடவடிக்கை எடுக்கப்படும்.
கொவிட் தொற்றின் காரணமாக மாணவர்களின் கற்றல் செயற்பாடுகள் முழுமையாக பாதிப்படைந்துள்ளன. எனவே அவர்களின் கல்வி உரிமையைப் பாதுகாப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றோம் என்றார்.
-எம்.மனோசித்ரா