நெல் மாபியாக்கள் அதிகளவில் உள்ள பொலன்னறுவை மாவட்டத்தில் தான் சேதன பசளைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. போராட்டங்களின் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளார்கள். சேதன பசளை திட்டத்திற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இல்லாவிடின் துரதிஷ்டவசாக மீண்டும் இரசாயன பசளையை இறக்குமதி செய்ய நேரிடும் என விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் 12 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில் சகல கமநல சேவை காரியாலயங்களுக்கு 2,500 ரூபா பெறுமதியான விதை தொகுதிகளை வழங்கவுள்ளோம்.
தமக்கு தேவையான மரக்கறிகளை தமது வீட்டுத்தோட்டத்தில் உற்பத்தி செய்துக் கொள்ளும் செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளோம். விவசாயிகள் விவசாயம் செய்வதற்கு தேவையான உரத்தை கோரி ஆரம்பத்தில் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார்கள். பெரும்போகத்திற்கு தேவையான உரத்தை உரிய நேரத்தில் வழங்கியுள்ளோம். ஆனால் தற்போது தடைசெய்யப்பட்ட இரசாயன உரத்தை கோரி போரட்டத்தில் ஈடுப்படுகிறார்கள்.
அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் விவசாயிகளின் போராட்டத்தின் பின்னணியில் உள்ளார்கள். சேதன பசளையை கொண்டு அம்பாறை, மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் விவசாய நடவடிக்கையில் ஈடுப்பட்டுள்ளார்கள். திருகோணமலை, அநுதாரபுரம், பொலன்னறுவை மற்றும் குருநாகலை ஆகிய மாவட்டங்களிலும் 50 சதவீதமான விவசாய நடவடிக்கைகள் நிறைவுப் பெற்றுள்ளன.
விவசாய நிலங்களுக்கு உரம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன. உர விவகாரம் அரசியல் மயப்படுத்தப்பட்டதன் காரணமாக போராட்டங்கள் வலுப்பெற்றுள்ளன. நெல்மாபியாக்கள் அதிகளவில் உள்ள பொலன்னறுவை மாவட்டத்தில் தான் போராட்டம் வலுப்பெற்றுள்ளன.
போராட்டத்தில் ஈடுப்பட்டு விவசாயிகள் என குறிப்பிட்டுக் கொள்பவர்களுக்கு மாலையில் உணவு பொதி, சாராய போத்தல்களை வழங்குவது யார் என்பது தொடர்பில் ஆராய்ந்தால் உண்மை வெளிவரும்.
அனைத்து தரப்பினரும் ஒன்றினைந்து சேதன பசளை என்ற நல்ல திட்டத்திற்கு ஆதரவளிக்க வேண்டும் இல்லாவிடின் துரதிஷ்டவசமான இரசாயன உரத்தை மீண்டும் இறக்குமதி செய்ய நேரிடும்.
அதுபோலவே மீண்டும் விசத்தை உண்ண தயாராகவுள்ளோம் என்பதை அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றார்.
-இராஜதுரை ஹஷான்