முகக்கவசம் அணியக் கூறிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியரை இருவர் தரையில் தள்ளித் தாக்கியதால் படுகாயமடைந்த ஊழியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
முகக்கவசம் இல்லாமல் மீகொடை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை எரிபொருள் நிலைய ஊழியர், தூர விலகுமாறு கூறியதையடுத்து ஓட்டுநர் அவரை மிரட்டியதாக பொலிஸார் தெரிவித்தனர்.
எரிபொருள் நிரப்பு நிலையத்திலிருந்து வெளியேறிய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர், சில நிமிடங்களுக்குப் பின்னர் முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிந்த மற்றொரு நபருடன் திரும்பி வந்து ஊழியரைத் தாக்கியுள்ளார்.
தாக்குதலை தடுக்க முயன்ற எரிபொருள் நிரப்பு நிலையத்தின் மற்றொரு ஊழியரும் தாக்கப்பட்டுள்ளார்.
பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஊழியர் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த மீகொட பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
மேலும் தாக்கியோர் தொடர்பில் தகவல் தெரிந்தால் தமக்கு அறிவிக்குமாறும் பொதுமக்களிடம் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.