தெஹிவளை பாத்தியா மாவத்தையில் அமைந்துள்ள பாத்தியா மஸ்ஜித் என்று அழைக்கப்படும் மத்ரஸதுல் பெளசுல் அக்பர் பள்ளிவாசல் வாயில் நேற்று முன்தினம் (15) காலை 8.00 மணியளவில் விஷமியொருவனால் சேதமாக்கப்பட்டுள்ளது.
விரைந்து செயற்பட்ட கொஹுவலை பொலிஸார் CCTV பதிவு மற்றும் தாக்குதல்தாரி வருகை தந்த மோட்டார் சைக்கிளின் பதிவிலக்கம் என்பனவற்றின் மூலம் அவரை கைது செய்து நேற்று அவரை நீதிவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
பள்ளிவாசல் கதவு மோட்டார் சைக்கிளால் மோதப்பட்டு தாக்கப்பட்டபோது முன்னாலுள்ள வீட்டைச் சேர்ந்த ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். இதனையடுத்து அவரது வீட்டுக் கதவும் தாக்கப்பட்டது.
பள்ளிவாசலுக்கு அருகில் வசிக்கும் ரம்ஸீன் அஸீஸ் மற்றும் பள்ளிவாசல் முஹத்தினார் எம்.அலியார் ஆகியோர் கொஹுவலை பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பான முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.
மேலும் சந்தேக நபர் போதியவத்தயைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.
இப்பள்ளிவாசல் சட்டவிரோத நிர்மாணம் என நகர அபிவிருத்தி அதிகார சபையினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கொன்று விசாரணையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
-விடிவெள்ளி