இந்திய வெளியுறவுச் செயலாளர் ஸ்ரீ ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா சற்றுமுன்னர் நாட்டுக்கு வருகை தந்துள்ளார்.
வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் ஜயநாத் கொலம்பகேவின் அழைப்பிற்கமைய அவரின் விஜயம் அமைந்துள்ளது.
இன்றிலிருந்து (02) எதிர்வரும் 05ஆம் திகதி வரை அவர் நாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அரச தலைவர்களுடனான முக்கிய சந்திப்பிலும் ஈடுபடவுள்ளார்.
இந்த விஜயம் நீண்டகால பலதரப்பட்ட உறவுகளை ஒருங்கிணைப்பதற்கும் இரு நாடுகளுக்கிடையிலான இருதரப்புக் கூட்டுறவுகளை மேம்படுத்துவதற்கும் பங்களிக்கும் என்று இலங்கையின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
வெளியுறவுச் செயலாளர் ஷ்ரிங்லா, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரையும் சந்திக்கவுள்ளார்.
விஜயம் செய்யவுள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் இலங்கையில் தங்கியிருக்கும் போது கண்டி, திருகோணமலை மற்றும் யாழ்ப்பாணத்திற்கு விஜயங்களை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவின் வெளியுறவுச் செயலாளராகப் பதவியேற்றதன் பின்னர், அவர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.