அநுராதபுரம் மற்றும் மின்னேரிய பொலிஸ் பிரிவுகளில் கடந்த மாதம் பதிவான இரு தானியக்க பணப் பரிமாற்று இயந்திரத்தின் (ATM) பணப் பெட்டகத்தை உடைத்து பணம் கொள்ளையிட்டமை தொடர்பில் பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அநுராதபுரம் பொலிஸார் முன்னெடுத்த விஷேட விசாரணைகளுக்கு அமைய, எப்பாவலயைச் சேர்ந்த 30 வயதான சந்தேக நபர், சிலாபம் - பள்ளம பகுதியில் வைத்து சிறப்பு பொலிஸ் குழுவினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ கூறினார்.
சந்தேக நபர் கொள்ளையிட்ட பணத்தில் கொள்வனவு செய்த 24 இலட்சத்து 90 ஆயிரம் ரூபா பெறுமதியான சிறிய ரக லொறி,9 இலட்சம் ரூபாவரை பெறுமதி மிக்க அதிவேக மோட்டார் சைக்கிள், ஒரு இலட்சத்து 70 ஆயிரம் ரூபா வரை பெறுமதி மிக்க கையடக்கத் தொலைபேசி உள்ளிட்ட பொருட்களும் பொலிசாரால் மீட்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் கூறினார்.
அத்துடன் கொள்ளையிடப்பட்ட 76 இலட்சத்து 24 ஆயிரம் ரூபாவில் 29 இலட்சத்து 80 ஆயிரம் ரூபா பணத்தை மீட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர், வங்கிகளின் தானியக்க பணப் பரிமாற்று இயந்திரங்களுக்கு, பணத்தை எடுத்து செல்லும் தனியார் நிறுவனம் ஒன்றில் சாரதியாக கடமையாற்றி, நிதி மோசடி குற்றச்சாட்டொன்றின் பேரில் வேலையிலிருந்து இடைநிறுத்தப்பட்டவர் என விசாரணைகளை முன்னெடுக்கும் அநுராதபுரம் பொலிஸ் நிலையத்தின் உயர் அதிகாரி ஒருவர் கேசரிக்கு கூறினார்.
கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி அநுபுராதபுரம், தாதியர் பாடசாலை முன்பாக உள்ள அரச வங்கி இலத்திரனியல் பணப்பறிமாற்று இயந்திரத்தில் கொள்ளையிட முயற்சித்து, அங்கிருந்த 50 ஆயிரத்து 940 ரூபா பெறுமதியான சி.சி.ரி.வி.யின் காட்சிகள் பதிவாகும் டி.வி.ஆர். இயந்திரத்தை கொள்ளையிட்டு சென்றமை, கடந்த செப்டம்பர் 27 ஆம் திகதி பொலன்னறுவை மாவட்டம், மின்னேரியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மின்னேரியா குளத்தின் முன்னால் அமைந்துள்ள பல் பொருள் அங்காடியை ஒட்டிய அரச வங்கியொன்றின் தானியக்க பணப் பரிமாற்று இயந்திரத்தின் பணப் பெட்டகத்தின் உலோகப் பகுதியை வெட்டி அகற்றி 76 இலட்சத்து 24 ஆயிரம் ரூபா பணம் கொள்ளை ஆகிய இரு சம்பவங்களுடனும் தொடர்புபட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இவ்விரு சம்பவங்களின் போதும், அந்த இலத்திரனியல் பணப் பறிமாற்று கூண்டின் சி.சி.ரி. காட்சிகள் பதிவாகும் டி.வி. ஆர் இயந்திரமும் கொள்ளையிடப்பட்டிருந்த நிலையில், சந்தேக நபரிடமிருந்து அவ்விரு டி.வி.ஆர். இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.
அநுராதபுர கொள்ளைக்கு சந்தேக நபர், வாடகைக்கு பெற்ற ஒரு லொறியை பயன்படுத்தியிருந்த நிலையில், அதன் உரிமையாளரை அடையாளம் கண்டு முன்னெடுத்த தீவிர விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை அடையாளம் கண்டதாகவும் அதனையடுத்தே முன்னெடுத்த விசாரணைகளில் அவரைக் கைது செய்ய முடிந்ததாகவும் அநுராதபுரம் பொலிஸார் கூறினர்.
இந்நிலையில் சந்தேக நபர், இன்று அநுராதபுரம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில் மேலதிக விசாரணைகளை அனுராதபுரம் மற்றும் மின்னேரிய பொலிஸார் இணைந்து முன்னெடுத்துள்ளனர்.
-எம்.எப்.எம்.பஸீர்