நவ்பர் மௌலவி உள்ளிட்ட 10 பேர் சார்பில் தமிழ்மொழி அறிந்த சட்டத்தரணி நியமிக்குமாறு கோரிக்கை! மேலும் 24 பேருக்கு குற்றப்பத்திரம் தாக்கல்!

advertise here on top
Join YazhNews WhatsApp Community

நவ்பர் மௌலவி உள்ளிட்ட 10 பேர் சார்பில் தமிழ்மொழி அறிந்த சட்டத்தரணி நியமிக்குமாறு கோரிக்கை! மேலும் 24 பேருக்கு குற்றப்பத்திரம் தாக்கல்!


ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், நவ்பர் மௌலவி எனப்படும் இப்றாஹிம் மொஹமட் நவ்பர் உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று (04) குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.


குறித்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதிபதிகள் ஆயம் முன்னிலையில், இந்தக் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


ஏப்ரல் 21 தாக்குதலுடன் தொடர்புடைய 25 பிரதிவாதிகளுக்கு எதிராக, சட்டமா அதிபர் தாக்கல் செய்துள்ள வழக்கு, நீதிபதிகளான தமித் தொட்டவத்த, அமல் ரணராஜா மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோரடங்கிய ஆயம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.


கொவிட்-19 தொற்று உறுதியாகியுள்ள, வழக்கின் 15 ஆவது பிரதிவாதியான மொஹமட் ஹனீபா செய்நுள் ஆப்தீன் என்பவர் இன்றைய தினம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவில்லை.


இந்நிலையில், மன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரினால், குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


இந்த வழக்கின் பிரதான பிரதிவாதியான நவ்பர் மௌலவி உள்ளிட்ட 10 பேர் சார்பில், சட்டத்தரணி மன்றில் முன்னிலையாகவில்லை.


இந்நிலையில் தங்கள் சார்பில் முன்னிலையாக, தமிழ்மொழி அறிந்த சட்டத்தரணி ஒருவரை அரசாங்க செலவில் நியமிக்குமாறு அந்தப் பிரதிவாதிகள் மன்றில் கோரியுள்ளனர்.


இதற்கமைய பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையாவதற்காக தமிழ்மொழி அறிந்த சட்டத்தரணிகளின் பெயர்ப்பட்டியலை சமர்ப்பிக்குமாறு, மூவரடங்கிய நீதிபதிகள் ஆயம், இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவருக்குப் பணித்துள்ளது.


இதேநேரம், சிங்கள மொழியில் முன்வைக்கப்பட்டுள்ள குற்றப்பத்திரத்தின், தமிழ்மொழியாக்கத்தை பெற்றுக்கொடுக்குமாறு, வழக்கின் பிரதான பிரதிவாதியான நவ்பர் மௌலவி உள்ளிட்ட 17 பிரதிவாதிகள் மன்றில் கோரியுள்ளனர்.


அத்துடன், குற்றப்பத்திரத்தை தமக்கு ஆங்கில மொழியாக்கத்தில் வழங்குமாறு மொஹமட் அக்ரம் என்ற பிரதிவாதி மன்றில் கோரியுள்ளார்.


இந்நிலையில், குறித்த மொழியாக்கங்களை வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நீதிபதிகள் ஆயம் மனுதாரர் தரப்புக்கு பணித்துள்ளது.


Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.