கொரோனா தொற்றுநோய் காரணமாக இலங்கை அரசாங்கம் 160,000 கோடி ரூபாய் மொத்த வருமானத்தை இந்த வருடம் இழந்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் இன்று (07) தெரிவித்தார்.
நிதி மற்றும் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு சட்டமூலம் தொடர்பான மீதான விவாதத்தின் போதே அமைச்சர் இவ்விடயத்தைத் தெரிவித்தார்.
தற்போது தனிமைப்படுத்தல் ஊரடங்கு விதிக்கப்பட்டதில் இருந்து 70% மறைமுக வரி வருவாய் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.
"உள்நாட்டு இறைவரித் திணைக்களம், சுங்கம் மற்றும் மதுவரித் திணைக்களம் ஆகியவற்றிலிருந்து பெறப்பட்ட வருவாய் நாடு முடக்கப்பட்டமையால் கடுமையாக குறைந்துள்ளது" என்றும் குறிப்பிட்டார்.
"செலவினங்களுடன் ஒப்பிடும்போது மொத்த வருவாய் வெகுவாக குறைந்துள்ளது. இலங்கையின் அரச செலவுகள், பல நூற்றாண்டுகளாக வருவாயை விட அதிகமாக இருப்பதால் இதற்கு தொற்றுநோய் முற்றிலும் காரணம் அல்ல ”என்று அவர் தெரிவித்தார்.
"நாங்கள் மிகுந்த சிரத்தையுடன் வெளிநாட்டு உதவியைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி போன்ற நிறுவனங்களுடன் சலுகை கடன் திட்டங்களுக்கு மட்டுமே பணியாற்றுவோம் மற்றும் வெளிநாடுகளிடம் கடன் வாங்கும் போது எந்த நன்கொடையாளரும் விதிக்கும் அரசியல் அடிப்படையிலான நிபந்தனைகளுக்கு இலங்கை உடன்படாது” என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
நெருக்கடி நிலைமையை எதிர்கொள்ள அரசாங்கம் தயாராக இல்லை என்றும் நிதி நெருக்கடியில் எதிர்கட்சிகளுடன் இணைந்து பணியாற்ற தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.