கொரோனா வைரஸின் மியு (Mu) B.1.621 என்ற ஆபத்தான மாறுபாட்டின் வளர்ச்சி, பாதிப்பு, பரவல் ஆகியவை தொடர்பில் கண்காணித்து வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது.
கடந்த ஜனவரி மாதத்தில் கொலம்பியாவில் கண்டறியப்பட்ட மியு எனும் மாறுபாடானது, தடுப்பூசி மூலம் கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தியையே எதிர்க்கும் வல்லமை கொண்டதாக இருப்பதாகத் தெரிவித்துள்ள உலக சுகாதார ஸ்தாபனம், அந்த வைரஸ் குறித்து அடுத்தகட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
கொலம்பியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட மியு மாறுபாடு, தற்போது தென் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் கண்டறியப்பட்டு வருவதாக ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
புதிய வகை மாறுபாடு பரவுவதால் நோய்த் தொற்றும் உலக அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக தடுப்பூசி செலுத்தாதவர்களிடையே டெல்டா வகை வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது.
கொரோனா வைரஸின் சில மாறுபாடுகள் மாத்திரமே அதிவேகமாகப் பரவுதல், நோயின் தீவிரத்தை அதிகப்படுத்துதல், தடுப்பூசியை எதிர்த்தல், நோய் எதிர்ப்பு சக்தியை மட்டுப்படுத்துதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.