ஈஸ்டர் தாக்குதலுக்கு வழிவகுத்த சஹரானின் அலைபேசியிலிருந்த மதர்போர்ட்டினை (Motherboard) கொண்டுசெல்ல வெளிநாட்டு உளவுத் துறைக்கு உத்தரவிட்டது யார் என்று தெரியவந்தால், ஈஸ்டர் தாக்குதலின் மூளையாக செயற்பட்டவர் யார் என்று தெரியவரும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்தார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக அரசியல் ரீதியாக தாக்கக்கூடியவர்களைப் பற்றி மட்டுமே நாங்கள் இன்று பேசுகிறோம் என்று தெரிவித்த அவர், இது தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
சஹ்ரானின் அலைபேசியின் மதர்போர்டை யார் எடுத்தார்கள் என்பது பற்றி யாரும் பேசுவதில்லை என்றும் பொலிஸின் எதிர்ப்பையும் மீறி அதை வேறு நாட்டிற்கு எடுத்துச் செல்ல நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
தாக்குதலின் அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய அலைபேசி, வெளிநாட்டு உளவுத்துறை மூலம் எடுத்துச் செல்லப்பட்மைக்கு உத்தரவிட்ட அரசியல்வாதிகளை விசாரித்தால், சம்பந்தப்பட்டோரை கண்டுபிடிக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.