அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் தோற்றமும் அதன் தற்போதைய வளர்ச்சியும்! -சபூனா ஸஹ்ர்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் தோற்றமும் அதன் தற்போதைய வளர்ச்சியும்! -சபூனா ஸஹ்ர்


வானளாவும் புகழுக்குரிய சரித்திரங்கள் யாவும் கற்களால் மாத்திரம் பொறிக்கப்படுவதில்லை. அழிக்கமுடியா காலத்தாலும் பொறிக்கப்படுகின்றன. அவ்வாறு காலத்தால் பொறிக்கப்பட்ட சரித்திரம் தான் அனைத்துப் பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் தோற்றமும் வளர்ச்சியும். 


பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலுகின்ற இளங்கலை பட்டதாரி மாணவர்கள் தமது இலவசக்கல்வியின் சுதந்திரத்தை பாதுகாக்கும் முகமாகவும் சமுதாயத்தில் தங்களுக்கான உரிமைகளை வென்றெடுக்கும் முகமாகவும் கல்விக்கு மேலதிகமான ஆற்றல்களை வெளிப்படுத்தும் நோக்கத்தோடும் காலத்திற்கு காலம் பல்வேறு செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றமை நாம் அறிந்ததே. அந்தவகையில் முஸ்லிம் சமூகத்தினை அடிப்படையாகக்கொண்டு *1972 ஆம் ஆண்டு பேராதனை, கொழும்பு, கடுபத்த வித்தியோதய, வித்தியாலங்கார மற்றும் யாழ்ப்பாண வளாகங்களின் முஸ்லிம் மஜ்லிஸ்கள் இணைந்து அனைத்து வளாகங்களிலும் உள்ள இளங்கலை பட்டதாரி மாணவர்களால் “சர்வ வளாக முஸ்லிம் மஜ்லிஸ்” முதன்முதலில் உருவாக்கப்பட்டது. இதன் கன்னி முயற்சிகள் வெற்றியடைந்து அனைத்து வளாக முஸ்லிம் மஜ்லிஸ் எனும் நாமம் நிலைக்கவே இதன் முதலாமாண்டு நிறைவு விழாவும் வருடாந்த மாநாடும் 1975 நவம்பர் மாதம் 2 ஆம் திகதி நடைபெற்றது. இந்த முதலாவது மாநாட்டில் அனைத்து வளாகங்களிலுமிருந்து சுமார் 500 இற்கும் மேற்பட்ட பல்கலைக்கழக மாணவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொண்டிருந்தனர். 1977 ஆம் ஆண்டுக்கு பின்னர் வந்த தலைவர்கள் பல்கலைக்கழக மாணவர்களுக்கும், அன்றைய சமூகத்திற்கும் பயனுள்ள பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுத்து சர்வ வளாக முஸ்லிம் மஜ்லிஸை சிறப்பாக நிரவகித்திருந்தனர்.


காலப்போக்கில் சர்வ வளாக முஸ்லிம் மஜ்லிஸ் இனுடைய செயற்பாடுகள் மழுங்கிய நிலைக்கு வரவே அதே நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு மீண்டும் 2002 ஆம் ஆண்டு  “அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியம்” (All University Muslim Students Association- AUMSA) உருவாக்கப்பட்டது. அன்று கொழும்பு பல்கலைக்கழக முகாமைத்துவ பீட மாணவர்களின் அறைகூவலால் மொரட்டுவை பல்கலைக்கழகம், ஸ்ரீ ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம், களனி பல்கலைக்கழகத்தின் ராகம வளாகம், கொழும்பு பல்கலைக்கழகத்தின் யூனானி மருத்துவ வளாகம் ஆகியவை இவ்வமைப்புடன் இணைக்கப்பட்டன. அப்போது இதன் ஆரம்ப உறுப்பினர்களாக சுமார் 30 முஸ்லிம் மாணவர்களே இருந்தனர். என்றாலும் அவர்கள் தங்களுக்குள் ஏற்படுத்திய பிணைப்பாலும் அவர்களது தலைமைத்துவத்தாலும்  வேரூன்ற ஆரம்பித்த அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தை அனைத்து பல்கலைக்கழக மாணவர்களும் பற்றிப்பிடித்துக்கொண்டு சென்றமையே அதன் வரலாறு வளர காரணமானது. 2004 ஆம் ஆண்டு நிருவாகத்தின் ஆரம்ப காலப்பகுதியில் முஸ்லிம் மாணவர்களை ஒன்றிணைக்கும் முயற்சிகள் சிறந்த முறையில் மேற்கொள்ளப்பட்டன. 2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின்போது மனிதாபிமான செயற்பாடுகளில் அனைத்துப்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமானது தன்னையும் ஈடுபடுத்திக்கொண்டது. 2012 ஆம் ஆண்டின் பிற்பாடு இவ்வமைப்பு மேலும் திறமையோடு செயற்பட வேண்டுமென்ற நோக்கில் பல இளங்கலை பட்டதாரிகளை இணைத்துக்கொண்டு செயற்பட்டது. 2013 ஆம் ஆண்டிலிருந்து அனைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களின் ஒருமித்த முடிவோடு ஒவ்வொரு ஆண்டுகளிலும் பொதுக்கூட்டம் நடாத்தப்பட்டு இதனுடைய நிருவாகங்கள் மாற்றப்பட்டு சிறந்த தலைமைத்துவத்தின் கீழ் இந்த அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினுடைய வினைத்திறன்மிக்க செயற்பாடுகள் தொடர்ந்தும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. 2014 ஆம் ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு பிராந்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கான ஒரு நாள் பயிற்சிப்பட்டறைகள் மேற்கொள்ளப்பட்டன. அதனையடுத்து 2015 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற நிருவாகமானது அனைத்து முஸ்லிம் மஜ்லிஸ்களையும் ஒருங்கிணைக்கும் செயற்பாடுகளையும் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியிலான கருத்தரங்குகளையும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தொழில்சார் வழிகாட்டல்களையும் நடாத்தியது. 2016 ஆம் ஆண்டில் புதிய நிருவாகமானது பல்கலைக்கழக மாணவர்களுக்கான இலங்கை நிருவாக சேவை வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டங்களையும் அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுடன் இணைந்து தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பு நிகழ்சிகளையும் நடாத்தியிருந்தது. 2017 ஆம் ஆண்டு காலப்பகுதியிலும் பாடசாலை மாணவர்களுக்கான தேசிய ரீதியிலான கருத்தரங்குகளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கான தொழில்சார் வழிகாட்டல் செயற்பாடுகளும் நடைபெற்றன. பின் 2018 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தில் மேலும் ஒரு விரிவாக்கம் ஏற்படுத்தப்பட்டது. 2019 ஆம் ஆண்டு பொறுப்பேற்ற நிருவாகமானது அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தை வலுப்படுத்தும்  நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதனடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையிலான தலைமைத்துவ  வழிகாட்டல் நிகழ்ச்சித்திட்டமான “அரோரா” வை நடாத்தியமை, தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு “Spade to shade” மரநடுகை செயற்திட்டத்தினை நடாத்தியமை, நாட்டில் நிலவிய அசாதாரண சூழ்நிலையின்போது FOCUS அமைப்புடனான கூட்டு அறிக்கையை வெளியிட்டமையும் அனைத்து பல்கலைக்க்கழக மணவர் கூட்டமைப்பு (IUSF) மற்றும் அனைத்து பல்கலைக்கழக பௌத்தர் அமைப்பு ஆகியவற்றுடனான கலந்துரையாடல்களையும் மேற்கொண்டமை முக்கிய அம்சங்களாகும். அதனைத் தொடர்ந்து 2020  ஆம் ஆண்டிற்கான நிருவாகத்தின் வழிகாட்டுதலின் கீழ் தனது புரட்சிகரமான செயற்பாடுகளால் விஷ்வரூப வளர்ச்சி கண்ட அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது நாடளாவிய ரீதியில் 26 பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களையும் மாவட்ட மற்றும்  பிரதேசங்களை அடிப்படையாகக்கொண்டு இயங்கக்கூடிய 20 இற்கும் மேற்பட்ட இளங்கலை பட்டதாரி அமைப்புக்களையும் உள்ளடக்கி பெரும் சாம்ராஜ்யமாக திகழ்கின்றது.


இன்று ஆழமாய் வேரூன்றியிருக்கும் இவ்வமைப்பானது அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள முஸ்லிம் மாணவர்களை ஒன்று சேர்க்கக்கூடிய அடிப்படை மையமாக திகழ்கின்றது. இலங்கை நாட்டின் ஐக்கியம், ஒருமைப்பாடு, இறையாண்மை, தேசிய பாதுகாப்பு என்பவற்றை உறதிப்படுத்த முன்னிற்றல், பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களை ஒன்றிணைத்து பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர்களது நலன் மற்றும் உரிமைகள் என்பன பேணப்படுதலை உறுதி செய்தல், பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் நலன் தொடர்பான தீர்மானங்களின்போது  சட்டம் மற்றும் மார்க்கம் ஆகிய வரையரைகளுக்குட்பட்டதாக கலந்தாலோசனை மூலம் முடிவினை எட்டுதல், பல்கலைக்கழகத்தினுள் அனைத்து வகையான பாகுபாடுகளையும் ஒழிப்பதற்காக பணியாற்றுதல், கல்வி, மனப்பாங்கு, தனிநபர் ஒழுக்கம் என்பவற்றை விருத்தி செய்து பல்கலைக்கழக மாணவர்களதும் நாட்டு மக்களினதும் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய சிறந்த எண்ணம், நம்பிக்கை என்பவற்றை வலுப்படுத்துதல் ஆகியவையே இவ்வமைப்பின் நோக்கங்களும் குறிக்கோள்களுமாகும்..  


அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் நிருவாகத்திலும் அதன் செயற்பாடுகளிலும் ஆண்களை போலவே பெண்களுக்கும் சமவுரிமை வழங்கப்பட்டிருந்தது. இதனடிப்படையில் அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் பெண்கள் பிரிவானது “பெண்கள் இளங்கலை பட்டதாரிகள் அமைப்பு” எனும் பெயரில்  உருவாக்கப்பட்டு 2010 ஆம் ஆண்டுக்கு முன்னர்வரை இயங்கிவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. ஆயினும் கடந்த 2019 ஆம் ஆண்டிலேயே பெண்கள் பிரிவு அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்துடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டது. அத்தோடு நிருவாக செயற்பாடுகளின்போது தலைவர் மற்றும் செயலாளர் தவிர்ந்த ஏனைய அனைத்து பதவிகளும் பொறுப்புக்களும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இன்றுவரை சமமாக கொடுக்கப்பட்டுள்ளமை முக்கிய விடயமாகும். 


அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் பெண்கள் பிரிவானது பல்கலைக்கழக பெண் மாணவிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கும் நடவடிக்கைகளையும் இலைமறை காயாகியுள்ள பெண் மாணவிகளின் ஆற்றல்களை வெளிக்கொணர்வதற்கான வாய்ப்புக்களை அமைத்துக்கொடுப்பதற்கான செயற்பாடுகளையும் நடைமுறைப்படுத்தி வருகின்றது. பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறும் பட்டதாரி மாணவிகள் சமூகத்திற்கு தேவையான சேவையாற்றக்கூடிய சிறந்த ஆளுமையுடைவர்களாக இருக்கவும் அவர்களுக்கான வாய்ப்புக்களை தேவையான சந்தர்ப்பங்களின்போது உரிமையோடு பெற்றுக்கொள்ளவும் இன்றைய காலகட்டங்களில் அனைத்து இடங்களிலும் அனைத்து துறைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் உணர்த்தப்பட்டு வழிகாட்டப்படுகின்றமை இவ்வமைப்பின் அளப்பரிய சேவையாகும்.


1975 ஆம் ஆண்டிலிருந்து அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் படிப்படியான செயற்பாடுகளால் இவ்வமைப்பானது வளர்ச்சி கண்டிருந்தபோதும் 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டு காலப்பகுதியையே அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் பொற்காலம் எனலாம். இக்காலப்பகுதியிலேயே இவ்வமைப்பின் பெரும்பாலான திட்டங்கள்  நடைமுறைப்படுத்தப்பட்டதோடு சமூகத்தின் தேவைகளையும் நிறைவேற்றி அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தை உச்சத்திற்கு கொண்டு சென்றமை இக்காலப்பகுதியிலுள்ள நிருவாகமே என்பது மறுக்கமுடியாத உண்மை..


அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது தேசிய ரீதியில் இன மத பேதங்கள் அற்ற வகையிலேயே பல்கலைக்கழக மாணவர்களிடையே பெரும்பாலான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தி  வருகின்றது. அந்தவகையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியான மர நடுகை செயற்திட்டங்கள், உணவுப்பற்றாகுறையை தீர்க்கும் முகமாக ஆயிரம் வீட்டுதோட்ட திட்டத்தினை தேசிய ஷூரா சபையுடன் இணைந்து நடாத்துதல், பாடசாலை மாணவர்களது கல்வி நடவடிக்கைகளை இலகுபடுத்த மின்கல்வி (E-Study) என்னும் இணையவழி கற்றல் செயற்பாட்டை நடைமுறைப்படுத்தல், இணையவழி தொழில் வழிகாட்டல் கருத்தரங்குகள் நடாத்துதல், பல்கலைக்கழக மாணவர்களிடையே எழுத்தாற்றலை வெளிக்கொணரும் செயற்திட்டமாக கட்டுரை வரைதல், Musabakathul Furkan எனும் கிராத் போட்டிகளை பல்கலைக்கழக மாணவர்களிடையே நடாத்துதல், பட்டப்படிப்பை முடித்தவர்களுக்கான பட்டப்பின் படிப்பிற்கான இணையவழி வழிகாட்டல் நிகழ்வுகளை ஏற்பாடு செய்தல் (Postgraduate Webinar Sessions) , பெண் இளங்கலை பட்டதாரிகளுக்கான வழிகாட்டல் நிகழ்வுகளை நடாத்துதல் (Ladies Wing’s Webinar Sessions)  என்பவற்றை இச்செயற்றிட்டங்களுக்கு உதாரணங்களாக கொள்ளலாம். அது மட்டுமல்லாது அனைத்து பல்கலைக்கழகங்களுக்கு இடையில் சிறந்த தொடர்புகளை பேணும் முகமாகவும் அனைத்து பல்கலைக்கழக மாணவர்களுக்கு இடையிலும் நல்லுறவுகளை ஏற்படுத்தும் முகமாகவும் இளங்கலை பட்டதாரி மாணவர்களின் ஆற்றல்களையும் ஆளுமைகளையும் வெளிக்கொணரும் நோக்கிலும் பல்வேறு செயற்பாடுகள் முன்வைக்கப்பட்டு செயற்படுத்தப்பட்டு வருகின்றமை மிகச்சிறந்ததொன்றாகும்.


மேலும் அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா, தேசிய ஷூரா சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்சில், முஸ்லிம் இளைஞர்கள் சம்மேளனம் மற்றும் இலங்கை முஸ்லிம் ஊடக மன்றம் போன்ற தேசிய அமைப்புக்களுடன் கைகோர்த்து அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள மாணவர்களின் கல்வியையும் அதற்கும் மேலதிகமாக கலை, கலாச்சாரம் மற்றும் தலைமைத்துவம் போன்றவற்றை மேலோங்கச்செய்ய நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படுகின்ற பல்வேறு சமூக செயற்திட்டங்களுக்கு தனது அளப்பரிய பங்கை ஆற்றி வருகின்றமை மிகப்பெரிய விடயமாகும்.



அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தினால் பல்கலைக்கழக மாணவர்களால் காலசூழ்நிலைகளுக்கு ஏற்ப வழங்கப்படுகின்ற பொருத்தமான தலைப்புகளில் மும்மொழிகளிலும் எழுதப்படுகின்ற கட்டுரைகள் பத்திரிகைகளில் பிரசுரிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதன் காரணமாக தற்பொழுது கட்டுரைகள் யாவும் அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் உத்தியோகபூர்வ வலைத்தளத்தில் “வழிதடம்” (The Path) எனும் பெயரில் வெளியிடப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதன் மூலமாக சிறந்த கருத்துக்களையும் எண்ணங்களையும் தற்கால சமுதாயம் எதிர்நோக்கக்கூடிய பிரச்சினைகளையும் சமூக மட்டத்திற்கு கொண்டுசெல்வதற்கான வாய்ப்புக்கள் அதிகரிக்கின்றன. 


வளர்ந்துவரும் இன்றைய சமுதாயத்திற்கும் இளைஞர்களுக்கும் முற்றிலும் நன்மை பயக்கும் வகையிலான ஏராளமான செயற்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்திய அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது எதிர்காலத்திலும் அவ்வாறான பயன்மிக்க செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்த இருக்கின்றது. அந்தவகையில் எதிர்கால செயற்திட்டங்களாக அனைத்து பல்கலைக்கழகங்களிலும் உள்ள முஸ்லிம் மஜ்லிஸ்களின் வரலாற்றுத் தொகுப்புக்களை சேகரிக்கும் திட்டமும் பல்கலைக்கழகங்களுக்கு வருடாந்தம் உள்வாங்கப்படும் முஸ்லிம் மாணவர்களின் உள்வருகை வீதங்கள் மற்றும் அளவுகள் பற்றிய ஆய்வும் நடாத்தப்பட இருக்கின்றன.


அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் படிப்படியான வளர்ச்சிப்பயணத்தில் கைகொடுத்து உதவிய வல்ல இறைவனுக்கே எல்லா புகழும்... அன்றைய விதை இன்றைய விருட்சமாகி நிற்கும் அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியத்தின் இந்த பிரம்மாண்ட வளர்ச்சியில் சொல்லாலும் செயலாலும் பொருளாலும் கைகொடுத்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் உரித்தாகட்டும். 


பின்னிடைவாயிருந்த தனிமனித ஆளுமைகளை தன் புரட்சிகரமான செயற்திட்டங்களால் மேலோங்கச்செய்து எட்டுத்திக்கும் புகழ் பரப்பி பெரும் விருட்சமாய் உயர்ந்து நிற்கும் அனைத்துப்பல்கலைக்கழக முஸ்லிம் மாணவர் ஒன்றியமானது பல்கலைக்கழக மாணவர்கள், பட்டதாரிகள், கல்வி நிபுணர்கள், பாடசாலை மாணவர்கள், இளைஞர் யுவதிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடனும் தேசிய அமைப்புக்களுடனும் இணைந்து வளமான எதிர்கால சமுதாயத்தை கட்டியெழுப்பி சமூகம் சார்ந்த தேவைகளை இனியும் நிறைவேற்றும் என்பது திண்ணமான உறுதி.  


A.K. SAFOONA SAHR

University of Kelaniya






Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.