தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு அமுல்படுத்தப்பட்டுள்ள காலப்பகுதியில், கொழும்பு மாவட்டத்தில் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக்கொண்ட விற்பனையாளர்களால் மட்டுமே நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபட முடியும் என, கொழும்பு மாவட்ட செயலாளர் பிரதீப் யசரத்ன தெரிவித்தார்.
இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொள்ளாதோருக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் வழக்குத் தொடரப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்க மீகொட, நாரஹேன்பிட்ட, இரத்மலானை மற்றும் பொகுந்தரவில் உள்ள பொருளாதார மையங்கள் திறக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள 13 பிரதேச செயலக பிரிவுகளை உள்ளடக்கி மொத்தமாக 12,294 நடமாடும் விற்பனையாளர்கள் மற்றும் 1,489 மொத்த விற்பனை நிலையங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், 2,345 விநியோக வழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.