இன்று (20) இரவு 10.00 மணி முதல் இம்மாதம் 30ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை, நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்கள் தீர்மானித்துள்ளார்.
இந்நிலையில், இதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி வழங்குவதை இலக்காகக் கொண்டு இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதுடன், செப்டம்பர் 01ஆம் திகதிக்கு முன்னர், அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கி முடிக்குமாறுஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
பிரதேச செயலாளர்கள், உள்ளூராட்சி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் கிராமிய கொவிட் ஒழிப்புக் குழுக்கள் மூலம் இந்த நபர்களை அடையாளம் கண்டு தடுப்பூசி ஏற்ற, 23ஆம் திகதி திங்கட்கிழமைக்கு முன்னர் சுகாதாரப் பிரிவுக்கு அறிக்கை அளிக்கப்பட வேண்டும். மேலும், 1906 என்ற அவசர இலக்கத்துக்கு அல்லது தேசிய கொவிட் ஒழிப்பு மையத்துடன் தொடர்புகொண்டு பதிவு செய்யும் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
இந்தத் தடுப்பூசித் திட்டத்தை, இராணுவத் தளபதியின் மேற்பார்வையின் கீழ் சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்படி மேற்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.
இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கொவிட் ஒழிப்பு விசேட குழுவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே, ஜனாதிபதி அவர்கள் இதனைத் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள காலத்தில், விவசாயம், ஆடை மற்றும் நிர்மாணத் தொழில்கள், ஏற்றுமதித் தொழில்கள், மருந்தகங்கள் உள்ளிட்ட அத்தியாவசியச் சேவைகள், விமான நிலையங்கள் மற்றும் விமான நடவடிக்கைகளைத் தொடர்ச்சியாகப் பேணவும் ஜனாதிபதி அவர்கள் பணிப்புரை விடுத்தார்.
தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மீறுபவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்டத்தை அமுல்படுத்துமாறும், ஜனாதிபதி அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை வழங்கினார்.
இக்காலப்பகுதியில், சுதேச மருந்துகளை கிராமிய மற்றும் நகர மட்டத்தில் மக்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு, சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சருக்கு ஜனாதிபதி அவர்கள் அறிவுறுத்தினார்.
மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்களான பசில் ராஜபக்ஷ, கெஹெலிய ரம்புக்வெல்ல, காமினி லொகுகே, டலஸ் அழகப்பெரும, பிரசன்ன ரணதுங்க, இராஜாங்க அமைச்சர்களான சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, சிசிர ஜயகொடி, சன்ன ஜயசுமன, ஜனாதிபதியின் தலைமை ஆலோசகர் லலித் வீரதுங்க, சுகாதார அமைச்சின் செயலாளர் மேஜர் ஜெனரல் விசேட வைத்திய நிபுணர் சஞ்சீவ முனசிங்க, சுகாதாரப் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, இராணுவ மற்றும் கடற்படைத் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் உள்ளிட்ட பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.