திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 300 குடும்பங்களுக்கு இலவசமாக குடிநீர் இணைப்புகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்டீனின் வேண்டுகோளுக்கிணங்க, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் இணைப்புச் செயலாளரும் கேகாலை மாவட்ட அமைப்பாளருமான எம்.எப்.ஏ. மரைக்காரின் ஆலோசனையின்படி சிங்கள, தமிழ், முஸ்லிம் என மூவின மக்களுக்கும் இந்த இலவசமான குடிநீர் இணைப்புகள் வழங்குவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன.
ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும் நீர் வழங்கல் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தலைமையில், குறுகிய காலத்துக்கள் இந்த குடிநீர் இணைப்புக்களை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலவச குடிநீர் இணைப்புகளை வழங்குவதற்கான ரூபா 49 இலட்சம் பெறுமதியான காசோலையினை ஜனநாயக இடதுசாரி முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் ராசிக் றியாஸ்டீனால் திருகோணமலை மாவட்ட நீர் வழங்கல் காரியாலயத்தில் கணக்காளரான நிஜாமுதீனிடம் நேற்றுமுன்தினம் (26) வியாழக்கிழமை கையளிக்கப்பட்டது. இவர்களுக்கான குடிநீர் இணைப்புகள் வழங்கும் வேலைத்திட்டம் வெகு விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைப்பாளர் ராசிக் றியாஸ்டீன் தெரிவித்தார்.
-எம்.எஸ்.எம்.ஸாகிர்