👉✍ 1983 - ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாத்தறை மாவட்ட தொகுதி அமைப்பாளராக நியனம்.
👉✍ 1989 இல் நடைபெற்ற பொதுத் தேர்தலில் மாத்தறை மாவட்டத்தில் சுதந்திரக்கட்சி சார்பில் களமிறங்கிய மங்கள சமரவீர 11,971 விருப்பு வாக்குகளைப்பெற்று, நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.
(1977 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலுக்கு பின்னர் நாடாளுமன்றத்தின் ஆயுட்காலம் மேலும் 6 ஆண்டுகளுக்கு சர்வஜன வாக்கெடுப்புமூலம் நீடிக்கப்பட்டதால் 89 இல்தான் தேர்தல் நடைபெற்றது. அதுவும் விகிதாசார விருப்பு வாக்கு அடிப்படையில்.)
👉✍ நாடாளுமன்ற அரசியலை சிறப்பாக முன்னெடுத்த மங்கள சமரவீர, தனது ஆளுமையால் குறுகிய காலப்பகுதியில் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்களின் நம்பிக்கையையும் வென்றெடுத்தார்.
👉✍ 1994 ஆகஸ்ட் 16 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலை பரந்தப்பட்ட கூட்டணி அமைத்தே ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி எதிர்கொண்டது. அந்தவகையில் மக்கள் கூட்டணியின் சார்பில் மாத்தளை மாவட்டத்தில் களமிறங்கிய மங்கள சமரவீர 61,574 விருப்பு வாக்குகளைப்பெற்று 2ஆவது முறையும் நாடாளுமன்றத்துக்கு தெரிவானார்.
இத்தேர்தலில் வெற்றிபெற்றதன்மூலம் ஐக்கிய தேசியக்கட்சியின் 17 ஆண்டுகால தொடர் ஆட்சிக்கு சந்திரிக்கா அம்மையார் தலைமையில் சுதந்திரக்கட்சி முற்றுப்புள்ளி வைத்தது.
👉✍ 1994 இல் சந்திரிக்கா அம்மையார் தலைமையில் அமைந்த ஆட்சியில், மங்கள சமரவீர அமைச்சரவையில் இடம்பிடித்தார். தபால் மற்றும் தொலைத்தொடர்புகள் அமைச்சு பதவி வழங்கப்பட்டது. துடிப்புடன் செயற்பட்ட அவர் அத்துறையில் புரட்சிகரமான மாற்றங்களுக்கு வித்திட்டார்.
👉✍ 2000 ஒக்டோபர் 10 நடைபெற்ற தேர்தலிலும் சந்திரிக்கா அம்மையார் தலைமையிலான மக்கள் கூட்டணியே வெற்றிபெற்றது. மாத்தறையில் போட்டியிட்ட மங்களவும் வெற்றிநடைபோட்டார். அமைச்சரவையிலும் இடம்பிடித்தார்.
👉✍ தேர்தல் நடைபெற்று 11 மாதங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு, 2001 டிசம்பர் 05 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. இத்தேர்தலில் ஐ.தே.க. வெற்றிபெற்றது. சந்திரிக்கா அணி தோல்வி கண்டது. மாத்தறை மாவட்டத்தில் மங்களவின் வெற்றி தொடர்ந்தது.
👉✍ 2001 இல் நாடாளுமன்றத்தில் மிக முக்கிய பதவிகளுள் ஒன்றாகக் கருதப்படும் எதிரணி பிரதம கொறடா பதவியை வகித்தார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொருளாளராகவும் செயற்பட்டார். ஆளுங்கட்சிக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார்.
👉✍ 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடத்தப்பட்டது. 2004 ஜனவரி 20 ஆம் திகதி சந்திரிக்கா அம்மையார் தலைமையில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி. (வெற்றிலை சின்னம்) உதயமானது. ஜே.வி.பியும் கூட்டணியில் அங்கம் வகித்தது.
👉✍ இத்தேர்தலில் வெற்றிபெற்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியமைத்தது. நாடாளுமன்றம் தெரிவான மங்களவுக்கு சந்திரிகாவின் அமைச்சரவையில் துறைமுகங்கள், விமான போக்குவரத்து மற்றும் ஊடகத்துறை அமைச்சு பதவி வழங்கப்பட்டது. பிதமராக மஹிந்த ராஜபக்ச அறிவிக்கப்பட்டார்.
👉✍ 2005 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போது மஹிந்த ராஜபக்சவுக்காக மங்கள சமரவீர தீவிரமாக பிரச்சாரம் முன்னெடுத்தார். பரப்புரைகளுக்கான பொறுப்பு மங்களவிடமே ஒப்படைக்கப்பட்டிருந்தது. மஹிந்த வெற்றிபெற்றார். அவர் தலைமையிலான அமைச்சரவையிலும் மங்கள இடம்பிடித்தார்.
👉✍ 2007 இல் கருத்து முரண்பாடுகள் மற்றும் கொள்கை ரீதியிலான பிரச்சினைகளால் அமைச்சரவையில் இருந்து மங்கள வெளியேறினார்.
👉✍ 2010 இல் ஐக்கிய தேசியக்கட்சியில் இணைந்தார்.
👉✍ 2010 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் மாத்தறை மாவட்டத்தில் போட்டியிட்டார். 59, 836 விருப்பு வாக்குகளைப் பெற்று நாடாளுமன்றம் தெரிவானார்.
👉✍ 2015 ஜனவரி 08 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வெற்றிபெற செய்வதற்கு தீவிரமாக செயற்பட்டார். அத்தேர்தலில் மஹிந்த தோல்வியடைந்தார். ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி ஆட்சியும் கவிழ்ந்தது.
👉✍ 100 நாட்கள் ஆட்சியின்போது வெளிவிவகார அமைச்சராக செயற்பட்டார். ஜெனிவாவில் காலஅவகாசம் பெறுவதற்கு முக்கிய பங்கு வகித்து செயற்பட்டார்.
👉✍ 2015 ஆகஸ்ட் 17 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் மாத்தளை மாவட்டத்தில் போட்டியிட்ட மங்கள, 96,092 விருப்பு வாக்குகளைப்பெற்று வெற்றிநடையை தொடர்ந்தார்.
👉✍ பிணைமுறி விவகாரத்தையடுத்து நிதி அமைச்சர் பதவியில் இருந்து ரவி கருணாநாயக்க நீக்கப்பட்டார். ஜெனிவாவில் இணை அனுசரணை வழங்கியதால் சிங்கள தேசியவாத அமைப்புகளால் மங்களமீதும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.
👉✍ 2017 இல் மங்கள சமரவீர நிதி மற்றும் தகவல் ஊடகத்துறை அமைச்சராக அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறினேசவால் நியமிக்கப்பட்டார். வெளிவிவகார அமைச்சு பதவி திலக் மாரப்பனவிடம் ஒப்படைக்கப்பட்டது.
👉✍ மைத்திரியின் ஆட்சிக்கவிழ்ப்பு சூழ்ச்சிக்கு எதிராகவும், ஜனநாயகத்துக்காகவும் மங்கள கடுமையாக போராடினார்.
👉✍ ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிகவும் நம்பிக்கைக்குரிய பாத்திரமாக திகழ்ந்த மங்கள சமரவீர 2019 ஜனாதிபதித் தேர்தலின்போது, ரணிலின் எதிர்ப்புகளை, தடைகளையும்மீறி சஜித்தை பொது வேட்பாளராக களமிறக்குவதற்கும் முன்னின்று செயற்பட்டார். சஜித்துக்காக தீவிர பரப்புரைகளை மேற்கொண்டார்.
எனினும், 2019 நவம்பர் 16 இல் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றார்.
👉✍ ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக பிளவு பட்டது. சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உதயமானது. மங்கள சமரவீர அக்கூட்டணியுடன் இணைந்து செயற்பட்டார்.
👉✍ 2020 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் களமிறங்குவதற்கு ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வேட்புமனுவும் தாக்கல் செய்தார். அதன்பின்னர் இறுதி நேரத்தில் போட்டியில் இருந்து விலகினார். இனிமேல் நாடாளுமன்ற அரசியலை முன்னெடுக்கப்போவதில்லை எனவும் அறிவித்தார்.
👉✍ இறுதியாக ‘தூய தேசப்பற்றாளர்கள்’ எனும் அமைப்பை உருவாக்கி அதன் ஊடாக அரசியல் மற்றும் சிவில் சமூக செயற்பாடுகளை முன்னெடுத்திருந்தார்.
👉✍ மங்கள சமரவீர அரசியல்வாதி மட்டுமல்ல சிறந்த இராஜதந்திரியும்கூட. மனித உரிமை செயற்பாட்டாளர் என்றுகூட சொல்லாம். 88-89 காலப்பகுதியில் மனித உரிமைகளுக்காக மஹிந்தவுடன் இணைந்து சமராடியவர். நல்லாட்சி காலப்பகுதியிலும் மனித உரிமைகளுக்காக முன்னின்று செயற்பட்டவர்.
👉✍ தேசிய இனப்பிரச்சினையை ஏற்றதுடன், அதற்கு அரசியல் தீர்வு முன்வைக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்தவர். போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் குரல் எழுப்பியவர். இதனால் சிங்கள கடும்போக்கு வாதிகளின் எதிர்ப்பையும் கடுமையாக எதிர்கொண்டவர். பௌத்த பிக்குகளைக்கூட வெளிப்படையாகவே விமர்சிக்கக்கூடிய அரசியல் தைரியம் படைத்தவர்.
👉✍ தெற்கு அரசியலில் மிக முக்கிய புள்ளி, அஸ்திரம், கிங்மேக்கர் இப்படி பல பக்கங்களைக்கொண்ட மங்கள சமரவீர தனது 65ஆவது வயதில் இன்று எம்மைவிட்டு பிரிந்துவிட்டார். உங்கள் ஆத்மா இறைப்பாறட்டும். கொரோனா என்ற காலன் அவரையும் விட்டுவைக்கவில்லை.
-ஆர். சனத்