மிருகங்களை பள்ளிவளாகத்தில் அறுப்பது ஏன் நிறுத்தப்படல் வேண்டும்? - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

advertise here on top
Join YazhNews WhatsApp Community

மிருகங்களை பள்ளிவளாகத்தில் அறுப்பது ஏன் நிறுத்தப்படல் வேண்டும்? - முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

பள்ளிவாயல்களின் புனிதத்துவத்தைப் பாதுகாப்போம்! பள்ளிவாயல் மாடறுக்கும் இடமல்ல; மாடறுப்பதற்கு வேறு இடங்கள் இருக்கின்றன. மாடறுக்கும் கூடங்கள் உள்ளூராட்சி அதிகாரிகளால் அங்கீகரிக்கப்படுகின்றன மற்றும் கால்நடை அறுவை சிகிச்சை நிபுணர்கள் அல்லது PHI மேற்பார்வையின் கீழ் அறுக்கப்படுகின்றன.

இலங்கை பெளத்த மக்களை பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு நாடு; பல நூற்றாண்டுகளாக இந்த மக்களோடு நாம் நல்லுறவுடன் வாழ்ந்துவருகிறோம் என்பது மட்டுமல்ல இந்த நாட்டில் நமது இருப்புக்கு பெளத்தர்கள் பக்கபலமாக இருந்து வருகிறார்கள். குறிப்பாக விகாரைகளும் பிக்குகளும் நமது இருப்புக்கு ஆதாரம் சேர்த்தவை என்பதை மறந்து விடக்கூடாது. Bபன மண்டபங்களில் நமது வியாரிகள் தரித்திந்துள்ளனர். விகாரை வளாகத்தில் சமைத்துண்டுள்ளனர். சில இடங்களில் பிக்குகள் விகாரை நிலத்தை நமது பள்ளிவாயல் அமைக்க வளங்கியுள்ளனர். இந்த உறவுகளை புனர்நிர்மானம் செய்ய வேண்டிய காலம் இது.

அதே போல ஆங்கிலேயரின் பிரித்தாளும் உத்திகளுக்கும் பலியான இருதரப்பு புல்லுருவிகளாலும் கடந்த இரண்டு - மூன்று நூற்றாண்டுகள் எமது இரு சமூக உறவுகளும் பாதிப்புக்குள்ளாகியுள்ளமை கண்கூடு.

அண்மைக்காலமாக மேற்குலகால் கோடிக்கணக்கான டொலர்களைக் கொட்டி உலகெங்கும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள இஸ்லாமோபோபியாவின் அதிர்வுகளும் நம் நாட்டைப் பாதித்துள்ளது. எனவே இலங்கையில் இஸ்லாமிய விரோத சக்திகளும் சர்வதேச சக்திகளும் கைகோர்துள்ளமையை நாம் மறந்துவிடலாகாது.

என்றாலும் பெரும்பான்மையான பௌத்த மக்கள் முஸ்லிம் விமராதிகளல்லர். ஆனால் அவர்கள் மாடறுப்பதை விரும்புவதில்லை. மதரீதியான காரணங்களை விடவும் கலாச்சார பாரம்பரியக்காரணங்களும் இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் மாடறுப்பு என்பது அவர்களது உணர்வுகளைச் சூடேற்றும் விடயம் என்பதில் சந்தேகம் இல்லை. அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது என்பது நாம் இஸ்லாத்தை விட்டுவிடுவது என அர்த்தமல்ல.

இந்தப் பின்னணியில் 2021 ஈதுல் அழ்ஹாவும் குர்பான் கடமையும் பார்க்கப்படல் வேண்டும்.

குர்பான் கொடுக்க வேண்டாம் என வக்ப் சபை கூறவில்லை. மாற்றமாக, இந்த சுன்னத்தான அமலை செய்கின்ற போது பள்ளிவாயலை அதற்கான இடமாகக் கொள்ள வேண்டாம் என்றுதான் வக்பு சபை சொல்கிறது.

ஏன்?

சில வருடங்களுக்கு முன் சிலாபம் முன்னேஸ்வரம் கோயிலில் பல நூறு வருடங்களாக நடந்து வந்த மிருக பலி எவ்வாறு எதிர்க்கப்பட்டது; எவ்வாறு நிறுத்தப்பட்டது என்பதனை மீட்டிப்பார்ப்பது சிறப்பு.

மிருக உரிமை அமைப்புக்கள் சிலாபத்திலும் கொழும்பிலும் பல ஆர்ப்பாட்டங்களை நடாத்தி அதனை முடிவுக்கு கொண்டு வந்தனர்.

பல நூறு பள்ளிகளில் நடாத்தப்படும் குர்பான் மிருக அறுப்பு எதிர்காலத்தில் எவ்விதமாக அணுகப்படும்?. சமூகவலைத்தளங்களின் ஆதிக்க காலமான இக்காலத்தில் இப்பள்ளிகளிருந்து நூற்றுக்கணக்கான மிருகங்கள் அறுக்கப்படுகின்ற போது இவை நாடாளாவிய ரீதியில் எதிர்க்கப்பட்டால் என்னவாகும்.?

எனவே, பள்ளிவாயல் தவிர்ந்த வேறு இடங்களில் குர்பான் கடமையை கூட்டாகவோ அல்லது தனித்தனியாகவோ செய்வதற்கான வழிகளை சமூகத் தலைவர்கள் ஆராய வேண்டும். அதை விடுத்து இத்தகைய காலத்துக்குப் பொருத்தமான முடிவுகளை துணிச்சலாக எடுத்த வக்பு சபை உறுப்பினர்களையோ அதனை வக்ப் சபையின் முடிவுகளை நடைமுறைப்படுத்திய பணிப்பாளரையோ குறிவைப்பது நியாயமாகாது. வக்ப் சபையின் எட்டு உறுப்பினர்களால் முடிவுகள் எடுக்கப்படுகின்றன, தனி ஒருவரால் அல்ல.

வக்ப் சபை அரசியலுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும்; அதை அரசியலாக்க வேண்டாம். 2020 பெப்ரவதி முதல் சட்டத்தரணி திரு. சப்ரி ஹலீம்தீன் அவர்கள் தலைவராக இருக்கும் இக்காலப் பகுதியில் இது மிகவும் புறநிலை மற்றும் தொழில்முறை பெற்று வருகின்றது.

100 இலும் சற்று அதிகமான பள்ளிவாயல்களே கூட்டு குர்பானை நிகழ்த்தி வந்தன. கடந்த ஆண்டு எங்கள் பிரச்சாரம் காரணமாக பலர் வேறு வழிகளைக் கண்டறிந்துள்ளனர். சில இடங்களைத் தவிர, மீதமுள்ள பள்ளிவாயல்கள் வக்ப் சபையின் உத்தரவை நல்ல மனப்பான்மையுடன் எடுத்துள்ளன என்பதையும், குர்பானைச் செய்வதற்கான மாற்று வழிகளைக் கண்டறிந்துள்ளதையும் நாங்கள் புரிந்துகொள்கிறோம். அந்த சில இடங்கள் (சுமார் 15 இடங்கள்) ஆராயப்பட்டு, ஒவ்வொரு பிரச்சினைகளின் அடிப்படையில் சரியான தீர்வு வழங்கப்படும்.

ஏ.பீ.எம். அஷ்ரப்
பணிப்பாளர்
முஸ்லிம் பள்ளிவாயல்கள் மற்றும் அறக்கட்டளைகள் / முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம்

18.07.2021
Previous News Next News
Join YazhNews WhatsApp Community
ALERT: யாழ் நியூஸ் இணையத்தில் வெளியாகும் அனைத்து ஆக்கங்கள் மற்றும் கட்டுரைகள் அவற்றை எழுதியவர்களும், செய்திகளுக்கு அவற்றை அனுப்பியவர்களும், விளம்பரங்களின் நம்பகத்தன்மைக்கு அந்த விளம்பர நிறுவனங்களும், பேஸ்புக் மற்றும் இத்தலத்தில் தெரிவிக்கும் கருத்துக்களுக்கு அவற்றை பதிவிட்டவர்களுமே பொறுப்பு என தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் செய்திகளை போதுமான ஆதாரங்களுடன் எமது வாட்ஸாப் இலக்கத்துக்கு அனுப்பி வைக்கவும்.