கட்டுகஸ்தோட்டை பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி கட்டுகஸ்தோட்டை, ரனவன வீதியில் உள்ள தங்குமிடம் ஒன்றில் நடத்தப்பட்ட தனியார் வகுப்பொன்றை பொலிஸார் அண்மையில் முற்றுகையிட்டிருந்தனர்.
அதன்போது அங்கு 52 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டிருந்தனர். க.பொ.த.சா.த பரீட்சையில் சித்தியடையாத மாணவர்கள் சிலரே இவ்வாறு பெற்றோரின் அனுமதியுடன் தங்க வைக்கப்பட்டு வகுப்புக்கள் நடத்தப்பட்டு வந்துள்ளமை தெரிய வந்துள்ளது.
இவர்களில் ஒரு மாணவனுக்கு சுகயீனம் ஏற்பட்டதன் விளைவாக அவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது கொரோனா தொற்று உறுதியானது.
அதனையடுத்தே பொலிஸாரும் சுகாதார அதிகாரிகளும் இணைந்து குறித்த இடத்தை முற்றுகையிட்டனர். அதன்போதே அங்கு 52 மாணவர்கள் தங்கி கல்வி கற்ற விடயம் தெரிய வந்தது.பின்னர் 52 மாணவர்களும் 6 ஆசிரியர்களுமாக 58 பேரும் தனிமைப்படுத்தப்பட்டதுடன் அவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது அவர்களில் 31 பேருக்கு கொவிட் -19 தொற்று உறுதியாகியுள்ளது.