சமூக வலைத்தளங்களில் போலியான செய்திகளை பரப்புதல் மற்றும் மீள் பதிவிடல் செய்பவர்களைக் கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குற்றப்புலனாய்வு பிரிவினர் இதற்கான விசேட கண்காணிப்பை முன்னெடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இது குறித்து அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இணையத்தளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவும் செய்திகளினால் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
இவ்வாறான போலியான செய்திகளினால் மக்களின் அன்றாட செயற்பாடுகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றதோடு கொரொனா வைரஸ் மற்றும் டெங்கு கட்டுப்படுத்தல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கும் பாரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே, இது குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் போலி செய்திகளை சமூக வலைத்தளங்களில் பரப்பும் நபர்கள் மற்றும் அவற்றை மீள்பதிவிடும் நபர்கள் உள்ளிட்டவர்களுக்கு எதிரான நடவடிக்கைகளை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குற்றப் புலனாய்வு பிரிவின் கீழ் உள்ள கணணி குற்றப்பிரிவு இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. யாரேனும் போலியான தகவலை பரப்பி மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவாராயின் அது பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் 98 ஆம் பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும்.
மேலும் மக்கள் மத்தியில் போலியான செய்திகளை பரப்பினால் இலங்கை தண்டனை சட்டக்கோவையின் 120 பிரிவின் கீழ் குற்றமாகும்.
அது மாத்திரமன்றி இன மற்றும் மதங்களுக்கு இடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் செயற்பட்டால் சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சாசனத்தின் கீழ் தேசிய விதிவிதாணங்களுக்கமைய குற்றமாகும்.
எனவே, சமூக வலைத்தளங்களில் போலி தகவல்களை பரப்பும் நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க குற்றப்புலானாய்வு பிரிவுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. நாளையிலிருந்து சமூக வலைத்தளங்கள் கடுமையாக கண்காணிக்கப்படுவதாக தெரிவித்தார்.
எம்.மனோசித்ரா