இலங்கையில் முஸ்லீம்களையும் ஏனைய சிறுபான்மை இனத்தவர்களையும் கண்மூடித்தனமாக கைது செய்வதற்காக பயங்கரவாத தடைச்சட்டம் திட்டமிட்ட முறையில் பயன்படுத்தப்படுகின்றது என முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு நிராகரித்துள்ளது.
இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றிய பிரதிநிதிகள் குழுவின் பொறுப்பதிகாரி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் தூதுவர்களுடனான சந்திப்பின்போது வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்த்தன இதனை தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் பத்தாம் திகதி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து கவலை வெளியிட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பான தீர்மானம் - தகவல் தொடர்பில் தவறான விடயங்களை கொண்டுள்ளது; அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் பன்முக முன்னேற்றத்தை கருத்தில் கொள்வில்லை என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் மீது இழைக்கப்பட்ட கொடூரமான செயல்களிற்கு தீர்வை காண்பதற்காகவே பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகின்றது என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பயங்கரவாத தடைச்சட்டத்தின் விதிகளை மறுஆய்வு செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த முயற்சியை நோக்கி தேவையான திருத்தங்களை முன்மொழிய தற்போதுள்ள சட்டத்தை அரசாங்கம் ஆராய்ந்து வருகின்றது,மேலும் ஏனைய நியாயாதிக்கங்களால் பின்பற்றப்படும் சர்வதேச சட்டங்களையும் ஆராய்ந்து வருகின்றது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.