மாவனெல்லையில் மண்சரிவில் சிக்கி உயிரிழந்த குடும்பத்தினரின் சடலத்தை கண்டுபிடிக்க அவர்கள் வளர்ந்த நாய் உதவி செய்துள்ளது.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக மாவனெல்லை - தெவனகல பகுதியிலுள்ள வீடொன்றின் மீது பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்த நிலையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நால்வர் உயிரிழந்தனர்.
மண் குவியலில் சிக்கியவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டிருந்த நிலையில், சடலங்களை கண்டுபிடிக்க நாய் உதவியுள்ளது.
முன்னதாக, பாதிக்கப்பட்டவர்களைத் தேடும் மீட்புப் பணியாளர்கள் செல்ல அந்த நாயும் சம்பவ இடத்திற்கு வந்தபோது விரட்டினர். ஆனால் அது திரும்பி வந்து அதன் முன் பாதங்களால் சேற்றைத் கிளறத் தொடங்கியது. மண்ணால் புதைக்கப்பட்ட குடும்ப உறுப்பினர்களை எங்கு தேடுவது என்பது மீட்பவர்களுக்கு ஒரு துப்பு கொடுத்தது. இதன்போது சடலங்கள் அந்த இடத்திலேயே கண்டுபிடிக்கப்பட்டன.
குறித்த நாய் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசப்பட்டு வருவதுடன், அனைத்து ஊடகங்களில் முன்னிலை செய்தியாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.