பயணத்தடைகளை தளர்த்துவது பொருத்தமற்றது என பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
நாட்டில் பதிவாகி வரும் கொரோனா தொற்று உறுதியாளர்கள் எண்ணிக்கையை கருத்திற் கொள்ளும் போது எதிர்வரும் 14ஆம் திகதி பயணத்தடையை தளர்த்துவது சாத்தியமற்றது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பயணத்தடை விதிக்கப்பட்டாலும் மக்கள் அதிகளவில் பயணங்களை மேற்கொள்வதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
பயணத்தடை மூலம் 90 வீதமான மக்களின் பயணங்களை வரையறுப்பதே நோக்கமாக காணப்பட்டது எனவும் அந்த நோக்கம் நிறைவேற்றப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாள் கூலிக்கு பணியாற்றுவோர் தவிர்ந்த பலரும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்க தனியார் நிறுவனங்களில் பணியாற்றுவோர் நாள்தோறும் கடமைக்கு சமூகமளிக்கும் நிலைமையை அவதானிக்க முடிகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
பயணத் தடை காலத்தின் ஒரே வித்தியாசம் பொதுப் போக்குவரத்து கிடையாது எனவும் மக்கள் தனியார் வாகனங்களில் பயணங்களை மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
கொரோனா மூன்றாம் அலையின் முதல் தொற்றாளர்கள் மட்டுமே பரிசோதிக்கப்படுவதாகவும், பீ.சீ.ஆர் பரிசோதனைகளை நடாத்துவதில் சிரமங்கள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நோய்த் தொற்றாளியின் இரண்டாம், மூன்றாம் தொடர்பாளர்கள் பயணத் தடைக் காலத்தில் பயணங்களை மேற்கொள்வதனால் தொற்றாளர்களின் எண்ணிக்கையை வரையறுப்பதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளதாக ஆங்கில ஊடகமொன்றுக்கு உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.